தமிழ்நாட்டில் யாருக்கும் ஒமிக்ரான் பரவல் இல்லை: மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாதிரிகள் சேகரிப்பு...அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!!

சென்னை: ஒமிக்ரான் வைரஸ் தமிழகத்தில் இதுவரை யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனுடன் இணைந்து மா.சுப்பிரமணியன் வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியம், தமிழகம் முழுவதும் கூட்டம் அதிகம் கூடும் 8 இடங்களில் பொதுமக்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும், முடிவுகள் அனைத்தும் டெல்டா வைரஸ் என்றே வருவதாகவும் தெரிவித்தார்.

ஒமிக்ரான் வைரஸ் இதுவரை தமிழகத்தில் உறுதி செய்யப்படவில்லை என்ற அமைச்சர், ஒமிக்ரான் வைரஸ் குறித்து விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் 12 அரசு ஆய்வகங்களில் உருமாற்றம் அடைந்த வைரஸ்களை கண்டறிவதற்கு வசதி உள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இதற்கிடையே  ஒமிக்ரான் பரவல் முன்னெச்சரிக்கை தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ்.செல்வநாயகம், சென்னை, திருச்சி, கோவை, மதுரை, ஆகிய விமான நிலைய இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், தென் ஆப்ரிக்கா, சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகளில்  ஒமிக்ரான் பரவல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி இருப்பதால் இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர்களை விமான நிலையத்திலேயே தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று இல்லை என தெரியவரும் பட்சத்தில், அவர்கள் வீட்டில் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இந்தியாவுக்கு வந்த 8வது நாளில் மீண்டும் ஒரு சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: