'கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணைகள், கரையோர சுவர்கள் எழுப்பப்படும்'!: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: கொசஸ்தலை ஆற்றங்கரையோரங்களில்  சுவர் எழுப்புவதுடன் ஆங்காங்கே தடுப்பணைகளும் கட்டி மழை வெள்ள பாதிப்புகள் தடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். பூண்டி நீர்த்தேக்கம் மற்றும் புழல் ஏரியில் அதிகளவில் நீர் திறக்கப்பட்டதால் சென்னையில் மணலி புதுநகர், சடையன்குப்பம், பர்மா நகர், இருளர் காலணி உள்ளிட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மணலி புதுநகர் பகுதிகளில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளுடன் தண்ணீரில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். தண்ணீரை விரைவாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களை சந்தித்து நிவாரண உதவிகளையும் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, இனிவரும் காலங்களில் மழைநீர் ஊருக்குள் வராத அளவுக்கு நடவடிக்கை எடுப்பதற்காக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இருளர் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட புதிய குடியிருப்புகளில் குடியேறி ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர்களுக்கு எடுத்துரைத்தார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

Related Stories: