விவாதமே இல்லாத நாடாளுமன்ற ஜனநாயகம் வாழ்க!: வேளாண் சட்டங்கள் ரத்து குறித்து ப.சிதம்பரம் விமர்சனம்..!!

சென்னை: நாடாளுமன்றத்தில் விவாதமின்றி விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து முன்னாள் நிதியமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னர் எந்த விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்க தயார், எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் ஒன்றிய அரசு தயாராக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக தெரிவித்துள்ள ப.சிதம்பரம், நாடாளுமன்றத்தின் கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் விவாதம் இல்லாமல் ரத்து செய்யப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விவாதத்தை மறுப்பதற்கு, அரசும் எதிர்க்கட்சிகளும் ஒரே கருத்தை கொண்டிருக்கும் போது விவாதம் தேவையில்லை என்ற வேளாண் துறை அமைச்சரின் தர்க்கம் திகைப்பை ஏற்படுத்தியிருப்பதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார். முன்னர் அரசுக்கும் எதிர்கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து இல்லாவிட்டாலும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள ப.சிதம்பரம், தற்போதும் இருதரப்பும் ஒரே கருத்தை கொண்டுள்ளதால் விவாதம் இல்லாமல் மசோதாக்கள் ரத்து செய்யப்பட்டதாக அரசு கூறுகிறது என்று தெரிவித்துள்ளார். எப்படி இருந்தாலும், இரண்டு முறையும் இதில் விவாதம் நடத்தப்படவில்லை என்று கூறியுள்ள ப.சிதம்பரம், விவாதமே இல்லாத நாடாளுமன்ற ஜனநாயகம் வாழ்க! என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: