வங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாகத் தமிழகத்துக்கு எந்த எச்சரிக்கையும் கிடையாது : வானிலை ஆய்வு மையம்

சென்னை : வங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாகத் தமிழகத்துக்கு எந்த எச்சரிக்கையும் கிடையாது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி குமரி கடல் பகுதி வரை நீடிப்பதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை இன்று பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம் மற்றும் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை,  காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்,  உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வருகிற 2,3,4 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.  இது இன்று மாலை தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகரக் கூடும்.  அதனை அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும்,  அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 3ஆம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று, 4ஆம் தேதி வடக்கு ஆந்திரா - ஒடிசா கடற்பகுதியை நெருங்கக்கூடும்.

இதன் காரணமாக இன்று தெற்கு அந்தமான் பகுதி ,நாளை அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் தீவுப் பகுதிகள், நாளை மறுநாள் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள்,  வருகிற 3ஆம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதிகள்,  4ஆம் தேதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதிகள் ஆகியவற்றில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும்,  இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டது.

அத்துடன் தற்போது மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மகாராஷ்டிரா , கோவா கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும்.  இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தென்கிழக்கு அரபிக்கடல்,  கேரளக் கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 45 கிலோமீட்டர் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Related Stories:

More