புதுக்கோட்டையில் ஜவுளிக்கடையின் கட்டிடத்தை இடிக்கும் போது விபத்து: இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பிரபல ஜவுளிக்கடையின் கட்டிடத்தை இடிக்கும் போது சுவர் இடிந்து பணியாளர்கள் விழுந்துள்ளனர். இந்த இடிபாடுகளில் சிக்கிய 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை நகரப்பகுதிக்கு உட்பட்ட கீழ ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளதாக பகுதியாக உள்ளது. இங்கு பொதுமக்கள் நடமாட்டம் அதிகம். இந்நிலையில் தெற்கு 3ஆம் வீதியில் பிரபல ஜவுளிக்கடை இயங்கி வந்த கட்டிடம் ஒன்று தற்போது இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிடம் கடந்த 10 தினங்களுக்கு முன்பு விற்கப்பட்டுள்ளது. அதனை மருத்துவர் செந்தில்குமார் என்பவர் வாங்கி பத்திரப்பதிவு செய்துள்ளார். தற்போது அந்த கட்டிடத்தில் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கட்டிட பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்ட போது கட்டிடமானது எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. 7 பேர் இந்த இடிபாடுகளில் சிக்கிய நிலையில் உடனடியாக தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கிய 2 பெண்கள் உள்பட 7 பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இந்த கட்டிட இடிபாடுகளில் மேலும் யாரேனும் சிக்கியுள்ளனரா என்ற சந்தேகத்தின் பேரில் ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களை கொண்டு கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியானது நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த விபத்து நடந்த இடத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பாரவையிட்டு வருகிறார். மேலும் மழைக்காலங்களில் இந்த கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்றதாகவும், இதனாலேயே தற்போது கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாகவும், மேலும் 2 மாடி கட்டிடத்தை மேலிருந்து இடித்து வராமல், கீழிருந்து கட்டிட பணியாளர்களை கொண்டு இடித்ததாலேயே இந்த கட்டிட விபத்து ஏற்பட்டதாகவும் இப்பகுதியை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தற்போது இந்த இடத்தை வாங்கியவர் காலி இடம் என்று பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும், யாரேனும் ஆய்வுக்கு வந்தால் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் அவசர அவசரமாக கட்டிட இடிப்பு பணியானது நடைபெற்று வந்ததாகவும் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இதனை வாட்டாங்குட்டையை சேர்ந்த அரங்குலவன் என்பவர் ஒப்பந்தத்திற்கு இந்த கட்டிடத்தை இடிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். தற்போது இந்த இடிபாடுகளில் சிக்கி 7 பேர் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்று தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. 108 ஆம்புலன்ஸ்கள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது சம்பவ இடத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர்.

Related Stories:

More