நீதிமன்றம் உத்தரவிட்டும் கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிக்கு நிலம் ஒதுக்காத அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கண்டனம்

சென்னை: நீதிமன்றம் உத்தரவிட்டும் கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிக்கு நிலம் ஒதுக்காத அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.கோயம்பேடு தக்காளி மைதானத்தை திறக்க கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாகனங்களை நிறுத்தக்கூடிய இடத்தில் சிறுகடைகளின் உரிமையாளர்கள் விற்பனை செய்ததால் மைதானம் மூடப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தக்காளி விலை உயர்வை கருத்தில் கொண்டு தற்காலிகமாக வாகனங்களை நிறுத்த அனுமதிக்க முடியுமா என சி.எம்.டி.ஏ. மற்றும் கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி ஆகியவற்றிற்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தக்காளி விலை குறையும் வரை பொதுநலன் கருதி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளிகளை கொண்டுவந்து இறக்குவதற்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று மார்க்கெட் கமிட்டி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு நேற்று உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில் இன்று காலை 4 மணி முதல் 4 வாரத்திற்கு தக்காளி லாரிகளை அந்த ஒரு ஏக்கர் நிலத்தில் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவின்படி தக்காளிக்கு ஒரு ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் ஒதுக்கவில்லை என நீதிபதி சுரேஷ்குமார் முன் சங்கம் தரப்பில் வக்கீல் சிவா ஆஜராகி முறையிட்டார்.அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். இதையடுத்து அதிகாரிகள் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞரையும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரையும் ஆஜராக உத்தரவிட்டார்.

Related Stories: