ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள். தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் அம்மாவின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்த அதிமுக அறிவுறுத்தல்!!

சென்னை : முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின்  5ம் ஆண்டு நினைவு நாளை தமிழகமெங்கும் அனுசரிக்கும்படி தொண்டர்களுக்கு அதிமுக அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் இன்று அறிவிப்பில், “கழ நிரந்தரப் பொதுச்செயலாளர் அம்மா அவர்கள் நம்மையெல்லாம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் டிசம்பர் 5.

காலத்தால் அழியாத புரட்சிகர திட்டங்களால் தமிழ்நாட்டு மக்கள் வாழ்வில் பெரும் மாற்றங்களையும், எழுச்சியையும் ஏற்படுத்திய அம்மா புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும். தன்னலம் கருதாமல் மக்களுக்காக அறிவையும், உழைப்பையும் அர்ப்பணித்து பாடுபட்ட அம்மாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு கழகத்தினரின் இன்றையமையாத கடமை.

அம்மாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாளான டிசம்பர் 5ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அம்மா நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

இதில் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்துகொள்ள வேண்டும். அம்மாவின் நினைவு நாளில் அவர் பற்றிய நினைவுகளை சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சி பகுதி, வட்ட அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் நிர்வாகிகள் அனைவரும் ஆங்காங்கே அம்மாவின் திருஉருவ படங்களை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் செய்திட வேண்டும். கழக அமைப்புகள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் அம்மாவின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

More