கூடலூர் அருகே வீடுகளை இடித்து தானியம் சாப்பிட்ட அரிசி ராஜா யானை: 2 பெண்கள் காயம்

கூடலூர்: கூடலூர் அருகே அரிசி ராஜா காட்டு யானை நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து 2 வீடுகளை உடைத்து அரிசி, கோதுமை சாப்பிட்டு சென்றது. இதில் 2 பெண்கள் லேசான காயமடைந்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பல்வேறு கிராமப் பகுதிகளுக்குள் அடிக்கடி புகுந்து வரும் அரிசி ராஜா உள்ளிட்ட 2 காட்டு யானைகள் வீடுகளை உடைத்து அரிசி உள்ளிட்ட தானியங்களை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இந்த யானைகள் இதுவரை 30-க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளன. இந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி கண்காணிக்க வனத்துறையினர் கும்கி யானைகளுடன் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

 இரவு ரோந்து பணியிலும் வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். எனினும் இந்த யானை வனத்துறையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இரவு நேரங்களில் ஏதாவது ஒரு வீட்டில் புகுந்து அரிசியை சாப்பிட்டுச் செல்கிறது.

கதவு, ஜன்னல்கள், சுவர் போன்றவற்றை இடித்துவிட்டு இந்த யானை அரிசி தானியங்களை சாப்பிடுகிறது. இதனால் பலர் தங்களது வீடுகளை இழந்து உள்ளனர். இந்த நிலையில் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்துறை கிராமத்தில் கயமன் கொல்லி ஆதிவாசி குடியிருப்புகளில் வசிக்கும் மடம்பன் மற்றும் பொம்மன் ஆகியோரது வீடுகளை நேற்று முன்தினம் இரவு 1 மணி அளவில் அரிசி ராஜா யானை உடைத்து சேதப்படுத்தியது. பொம்மனின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்த யானை அரிசி, கோதுமை யை சாப்பிட்டதோடு அருகிலுள்ள சமையல் அறை மற்றும் கழிவறை  ஆகியவற்றையும் உடைத்து சேதப்படுத்தியது.        

மடம்பனின் வீட்டை யானை உடைத்தபோது வீட்டில் மடம்பன், மனைவி, தாயார், குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர் இருந்துள்ளனர். வெளியே செல்ல முடியாத நிலையில் வீட்டின் ஒரு அறையில் பதுங்கி வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ பகுதிக்கு உடனடியாக வந்த வனத்துறையினர் யானையை விரட்டி உள்ளனர். யானை வீட்டை உடைத்தபோது சுவற்றில் இருந்த கற்கள் விழுந்ததில் படிச்சி (54), மாதி (80) ஆகிய 2 பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து வீடுகளை உடைத்து சேதப்படுத்தும் அரிசி ராஜா காட்டு யானையை பிடித்து முதுமலை வனப்பகுதிக்கு அல்லது முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: