திருமங்கலம் அருகே அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள் அறவே இல்லாத ‘போலீஸ் கிராமம்’

* பல்லாண்டுகளாக தொடரும் சமூக நல்லிணக்கம்

* அடிப்படை வசதிகளை மக்களே செய்யும் அதிசயம்

திருமங்கலம்: திருமங்கலம் அருகே அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்கள் இல்லாத அதிசய கிராமமாக திகழ்கிறது கரிசல்பட்டி. பல ஆண்டுகளாக சமூக ஒற்றுமையுடன் திகழ்வதாக கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் நகரின் நுழைவாயிலில், நான்குவழிச்சாலையில் உள்ளது கரிசல்பட்டி கிராமம். இங்கு சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் உள்ளனர். ஆனாலும், கட்சிக் கொடிக்கம்பங்களே இல்லை. இக்கிராமத்திற்கு ‘போலீஸ் கிராமம்’ என்ற பெயரும் உள்ளது. 1950ம் ஆண்டில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட காவல்துறையினர் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏதாவது ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அதை மேம்படுத்த முடிவு செய்தனர். அப்போது போலீசார் தேர்ந்தெடுத்தது தான் கரிசல்பட்டி கிராமம். போலீஸ் கிராமம் என்ற பெயருக்கு இதுதான் காரணம். தார்ச்சாலை, கிராமச்சாவடி, அரசுப்பள்ளி, தெருவிளக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் போலீசார் தங்களது செலவில் செய்து கொடுத்தனர்.

அப்போதைய மதுரை மாவட்ட எஸ்பி வெங்கட்ராமன் 1957ல் போலீஸ் கிராமம் கரிசல்பட்டி தாயநேரி என்ற கல்வெட்டை ஊர் சாவடியில் திறந்து வைத்தார். அந்த கல்வெட்டு இப்போதும் உள்ளது. இதுகுறித்து கரிசல்பட்டி முத்துபாண்டி கூறுகையில், ‘‘போலீஸ் கிராமம் என அழைக்கப்படும் எங்கள் ஊரில், போலீசார் தத்தெடுத்து சாலை, சாவடி, கோயில்கள், பள்ளி என ஊருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர். அதை நாங்கள் பராமரித்து வருகிறோம். இதேபோல் அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள் தேவையில்லை என கிராம மக்கள் முடிவு செய்து, அவைகளை 10 ஆண்டுகளுக்கு முன்பே அகற்றி விட்டோம். ஆனால், அனைத்துக் கட்சி தொண்டர்களும் கிராமத்தில் உள்ளனர்.

முக்கிய கட்சி பிரமுகர்கள் வரும்போது மட்டும் கொடிகள் கட்டப்படும். அவர்கள் சென்றபின் அவைகளை அகற்றி விடுவோம். சகோதரத்துவத்தை வளர்க்க நீண்ட நாட்களாக இந்த நடைமுறையை கடைப்பிடித்து வருகிறோம். அனைவரும் ஒற்றுமையுடன் வசித்து வருகிறோம்’’ என்றார். முன்னாள் ஊராட்சி தலைவர் முருகேசன் கூறுகையில், ‘‘கரிசல்பட்டிக்கு மற்றொரு பெயர் தாயனேரி. இப்பகுதியில் உள்ள இரண்டு ஜமீன்களின் தாயார் பிறந்த கிராமம் என்பதால், இப்பெயர் வந்தது. இதற்கான கல்வெட்டு எங்கள் ஊர் பள்ளி மற்றும் சாவடியில் உள்ளன’’ என்றார்.

Related Stories: