எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரான இளங்கோவனின் வங்கி லாக்கரில் ஏராளமான சொத்து ஆவணங்கள் சிக்கின: லஞ்ச ஒழிப்புத்துறை

சேலம்: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரான சேலம் இளங்கோவன் வங்கி லாக்கரை திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் வங்கி லாக்கரில் இருந்து 30க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களின் மதிப்பு பல கோடி இருக்கும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் அளித்துள்ளது. கடந்த மாதம் இளங்கோவன் வீடு உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் ஆவணங்கள் சிக்கின. ஏராளமான தங்கம், ரூ.70 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு முதலீடுகள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன. பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரான இளங்கோவன் மாநில கூட்டுறவுத்துறை வங்கி தலைவராகவும் சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் உள்ளார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரும், மாநில கூட்டுறவு வங்கியின் மாநில தலைவருமான இளங்கோவன், கடந்த 4 ஆண்டுகளில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்ததாக தகவல் வெளியாகியது. இவர் நிழல் அமைச்சரை போலவே செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி அவருடைய வீடு, ஆத்தூரில் உள்ள அவருடைய உறவினர்கள் வீடு, அவரின் நண்பர்கள் வீடு , சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலும், திருச்சி முசிறியில் உள்ள கல்வி நிறுவனம் ஆகிய 26க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். காலையில் தொடங்கிய சோதனையானது நள்ளிரவு வரை நீடித்தது. சுமார் 18 மணி நேர சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. குறிப்பாக 70 கோடி ரூபாய் அளவில் அவர் அந்நிய முதலீடுகளை வாங்கி குவித்திருப்பதும் இந்த சோதனையில் வெளியானது.

600 ஏக்கருக்கு மேல் அவர் சொத்துக்களை வாங்கி குவித்ததும், பல்வேறு இடங்களில் வீடு, நிலங்களை வாங்கி குவித்ததும் இந்த சோதனையில் தெரிய வந்தது. இந்த நிலையில் தான் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 2 வங்கி லாக்கரின் சாவி கிடைத்தது. இரண்டு வங்கி லாக்கரின் சாவியை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒப்படைத்தனர். நேற்று நீதிமன்றம் மூலம் ஆணை பெற்று வங்கி லாக்கரில் சோதனை நடத்தினர். அயோத்தியாப்பட்டினத்தில் உள்ள நகர கூட்டுறவு வங்கி லாக்கரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த லாக்கரில் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. இந்த நிலையில் தான் சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய கூட்டுறவு வங்கியில் உள்ள லாக்கரில் சோதனை நடத்தினர். இந்த கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தற்போது இளங்கோவன் இருந்து வருகிறார். இந்த லாக்கரில் சோதனை நடத்தப்பட்ட போது இதில் 30க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள் கிடைக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

More