பொதுத் தேர்வை மே மாதத்திற்கு தள்ளி வையுங்கள் : ஓ பன்னீர் செல்வம் வேண்டுகோள்!!

சென்னை: கொரோனா, வடக்கிழக்கு பருவமழை காரணமாக பள்ளிகள் இயங்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுத் தேர்வை மே மாத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், சென்ற மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்கியதுடன்,  நவம்பர் மாதத் துவக்கத்தில் இருந்தே கனமழை காரணமாக,  தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை ,  திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மாறி மாறி விடுமுறை விடப்பட்டன . சில இடங்களில் நீர் தேங்கி இருந்ததன் காரணமாகவும்,  சில இடங்களில் பள்ளிகளுக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே நீர் தேங்கி இருந்ததன் காரணமாகவும்,   மாணவ, மாணவியரால் தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.

பொதுத் தேர்வுக்கான தயார் நிலையில் தொடர்ச்சி இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும் , இன்னும் உள்ள எஞ்சிய காலத்தில் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை கூட முடிக்க முடியாத சூழ் நிலை நிலவுவதாகவும், சில பாடங்கள்  நீக்கப்பட்டாலும், சிறப்பாக அவசியம் படிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், மொத்தத்தில் குறுகிய காலத்தில் முழு பாடத்தையும் படிக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதில் வெகுவாக பாதிக்கப் படுபவர்கள் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை ,எளிய மாணவ மாணவியர் என்றும்  11 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு குறித்து தெளிவான முடிவு இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்றும் மாணவ மாணவியரும் ,ஆசிரியர்களும் தெரிவிப்பதாக  செய்திகள் வந்துள்ளன.

வடகிழக்கு பருவமழை என்பது இயல்பாக டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வரை இருக்கும் என்றாலும்,  தற்போது நிலவும் பருவ நிலை மாற்றத்தின் வடகிழக்கு பருவ மழை எத்தனை நாள் நீடிக்கும் என்பது புரியாத புதிராக இருக்கிறது.  முந்தைய ஆண்டுகளில் டிசம்பர் மாத இறுதி வரை வடகிழக்கு பருவ மழை பெய்துள்ள நிலையில் , இதனை அடிப்படையாகக் கொண்டு வைத்து பார்க்கும்போது, எஞ்சி இருக்கின்ற காலங்களில் பாடத்திட்டங்களை முடிப்பது என்பது மிகவும் சிரமம் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.   மாணவ மாணவியர் பொது தேர்வுக்கு தயாராவதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு , பாடத்திட்டங்களை ஓரளவுக்கு குறைப்பதும் , பொது தேர்வினை மே மாதத்தில் நடத்துவதும் தான் பொருத்தமாக இருக்கும் என்ற கருத்து மாணவ மாணவியர் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது.

இந்த நிலையில் மழைக்கால பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படாது என்றும்,   கூடுதல் வகுப்புகள் நடத்தி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் என்றும் தமிழக கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழக அமைச்சரின்  இந்த அறிவிப்பு மாணவ ,மாணவியர் ,பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க வழிவகுக்குமே  தவிர ,மாணவ, மாணவியர் மன நிம்மதியுடன் தேர்வுக்கு தயாராக வழி வகுக்காது. பாடத்திட்டங்களை குறைத்து பொதுத்தேர்வை மே மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்பதே மாணவ, மாணவியர் ,பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது . எனவே தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு தொற்றுநோய் பாதிப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு,  இதில் தொடர்புடையவர்களை அழைத்துப் பேசி, மாணவ ,மாணவியர் ,பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: