குமரி மாவட்டத்தில் பேரழிவு ஏற்படுத்திய ‘ஓகி’ புயல் கோரத்தாண்டவத்தின் 4 ஆண்டுகள் நிறைவு

நாகர்கோவில்:  குமரி மாவட்டத்தில் பேரழிவு ஏற்படுத்திய ஓகி புயல் கோரத்தாண்டவத்தின் 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. குமரி மாவட்டம் ‘ஓகி’ புயலால் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டம். மலையோர பகுதிகள் முதல் கடலோர பகுதிகள் வரை பெரும் உயிர் சேதத்தையும், பொருட் சேதத்ததையும் ஏற்படுத்தி சென்றது. வடக்கு இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு அருகில் கடந்த 2017 ஆண்டு நவம்பர் 29ம் தேதி உருவான ஒரு வெப்ப மண்டலச் சூறாவளி பின்னர் ‘ஓகி’ புயல் ஆகியது. நிலப்பகுதிக்கு அருகில் உருவானதால் ஆரம்பத்தில் இது வலுவடையவில்லை. எனினும் அரபிக் கடலை அடைந்தபோது டிசம்பர் 1ம் தேதி வலுவடையத் தொடங்கியது. இலங்கையில் சேதம் ஏற்படுத்திய பிறகு லட்சத்தீவுகள் மற்றும் இந்திய நிலப்பகுதியை நோக்கி நகரத் தொடங்கியது. டிசம்பர் 29ம் தேதி நள்ளிரவு தொடங்கி 30ம் தேதி அதிகாலைக்குள் குமரி மாவட்டத்தை புரட்டிப்போட்டது.  இறுதிக்கட்டத்தில் இது குஜராத்தைக் கடந்தது. இப்புயலுக்கு ‘ஓகி’ என்ற பெயர் வங்காளதேசத்தால் சூட்டப்பட்டது. ‘ஓகி’ என்ற சொல்லுக்கு வங்காள மொழியில் ‘கண்’ என்று பொருள்.  குமரி மாவட்டம் புயல் காற்றை உணரும் முன்னரே அது சேதத்ததை ஏற்படுத்தி சென்று விட்டது. இது 2015ம் ஆண்டின் ‘மெக்’ சூறாவளிக்குப் பிறகு அரபி கடலில் ஏற்பட்ட மிகவும் கடுமையான வெப்பமண்டல சூறாவளி ஓகி என கணிக்கப்பட்டது.

ஓகி புயலால் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் தென் பகுதிகளில் 218 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் 2 ம் தேதி லட்சத்தீவை ஓகி தாக்கியது. டிசம்பர் 6 ம் தேதி இந்தியாவில் குஜராத்தின் தென் கடற்கரைக்கு அருகே ஓகி வலுவிழந்தது. குமரி மாவட்டம் முழுவதும் ஓகி புயலின் தாண்டவத்தால் நிலைகுலைந்தது. புயல் கரையை கடக்காமலேயே அதன் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் மாவட்டம் திணறியது. குமரியிலும், கேரளாவிலும் மீன்பிடிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அரபிக்கடலில் புயலில் சிக்கி கரை திரும்பாத நிலை ஏற்பட மாவட்டமே பதட்டத்திற்கு ஆளானது. லட்சக்கணக்கான மரங்கள் சாலைகளில் வேருடன் பெயர்ந்து விழுந்தன. மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. 10 நாட்களுக்கு மேலாகியும் மின்சாரம் கிடைக்காமல் கிராமங்கள் இருளில் மூழ்கின. நவம்பர் 30ம் தேதி புயல் வீசிய நிலையில் டிசம்பர் 12ம் தேதி முதல்வரும், 20 நாட்களுக்கு பின்னர் டிசம்பர் 19ம் தேதி பிரதமரும் குமரி மாவட்டம் வருகை தந்தார்.

ஆய்வறிக்கைகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஓகி புயல் பாதிப்புகளை பார்வையிட குமரி மாவட்டம் வருகை தந்த பிரதமரிடம் அப்போதைய முதல்வர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். ஆனால் அவை இன்றளவிலும் கோரிக்கைகளாகவே இருந்து வருகிறது. ஓகி புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிக சீரமைப்பு பணிகளே பல இடங்களிலும் நிறைவு பெறாத நிலையில் நீர்நிலைகளில் நிரந்தர கட்டமைப்பு பணிகள் என்பது நடைபெறவில்லை. இதன் பலனை அடுத்துவரும் மழைக்காலங்களில் மக்கள் அனுபவித்து வருகின்றனர். எனவே புயல், வெள்ள சேதங்களில் பாதிப்புகளில் இருந்து மீள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பம்.

Related Stories:

More