இந்திய கடற்படையின் புதிய தளபதியாக பொறுப்பேற்றார் அட்மிரல் ஹரிகுமார்!: ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த தாயார்..!!

டெல்லி: இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ஹரிகுமார் பதவியேற்றார். அவரை கடற்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்து வரவேற்றனர். கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் கரம்பீர் சிங்கின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து துணை அட்மிரல் ஹரிகுமார் புதிய தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்தது. இந்நிலையில் டெல்லியில் தெற்கு பிளாக்கில் நடந்த விழாவில் அட்மிரல் ஹரிகுமார் இந்திய கடற்படையின் புதிய தளபதியாக இன்று பொறுப்பேற்றார்.

பதவியேற்பு விழாவில் அட்மிரல் ஹரிகுமாரின் தாயார் அவரை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அவர், இது தனக்கு பெருமை தரும்  பதவி என்றும் தனது முன்னாள் அதிகாரிகளின் நடவடிக்கைகளை பின்பற்றி மேலும் சிறப்பாக பணியாற்றுவேன் என்றும் தெரிவித்தார். அட்மிரல் ஹரிகுமாருக்கு தற்போது 59 வயதாகிறது. பல்வேறு விருதுகளை பெற்றுள்ள அவர், இந்திய கடற்படையில் 38 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.

முன்னதாக மும்பையில் உள்ள வெஸ்டர்ன் நேவி கமாண்ட் தலைவராக அவர் பணிபுரிந்து வந்தார். ஐஎன்எஸ் விராட், ஐஎன்எஸ் ரன்வீர் ஆகிய போர் கப்பல்களிலும் பணிபுரிந்துள்ளார். இவரது கடற்படை சேவைக்காக இவருக்கு பரம் விஷிஸ்ட் சேவா பதக்கம், அதி விஷிஸ்ட் சேவா பதக்கம் மற்றும் விஷிஸ்ட் சேவா பதக்கம் போன்றவை அரசால் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: