60 வருடங்களுக்கு பிறகு குண்டாற்றிற்கு வந்த வைகை தண்ணீர்: தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்

சாயல்குடி:  முதுகுளத்தூர் தொகுதி பாசனத்திற்கு வைகை அணை மூலம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என தினகரனில் செய்தி வெளியானது. இதனையடுத்து வைகையிலிருந்து கமுதி குண்டாற்றிற்கு தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதுகுளத்தூர், கடலாடி மற்றும் கமுதி ஆகிய முூன்று தாலுகாக்கள் உள்ளன. இங்கு நெல் பிரதான பயிராக பயிரிடப்படுகிறது. நடப்பாண்டில் முதுகுளத்தூர் வட்டாரத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர், கடலாடி வட்டாரத்தில் சுமார் 45ஆயிரம் ஏக்கர், கமுதி வட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் நெல் விவசாயம் பயிரிடப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக மிளகாய், கம்பு, குதிரைவாலி, சோளம் உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள், மல்லி, வெங்காயம், நிலக்கடலை உள்ளிட்ட தோட்டப்பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளது.

கமுதி பகுதிக்கு குண்டாறு, அபிராமம் பகுதிக்கு கிருதுமால்நதி, முதுகுளத்தூர் பகுதிக்கு ரெகுநாத காவிரி, தேரிருவேலி கூத்தன் கால்வாய், கடலாடி மலட்டாறு, சாயல்குடி கஞ்சன்பட்டி ஓடை  மற்றும் ஆறு நீர் வழித்தட ஆதாரங்கள் உள்ளது. மாவட்டத்தில் தொடர் மழை பெய்தாலும் கூட, முதுகுளத்தூர் தொகுதியிலுள்ள பெரும்பாலான கண்மாய், ஊரணி, பண்ணைக்குட்டைகள்  போன்ற நீர்நிலைகள் முழுமையாக நிரம்பாமல் உள்ளது. தற்போது கனமழையால் காவிரி, மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வைகை அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில். அதனை வைகை அணையின் உபரிநீர் வெளியேற்றம் மூலம் முதுகுளத்தூர் தொகுதிக்கு பார்த்திபனூர் பரளையாறு வழியாக தண்ணீர் திறந்து விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரனில் செய்தி வெளியானது.

இதனையடுத்து தமிழக அரசின் துரித நடவடிக்கையால் சுமார் 60 வருடங்களுக்கு பிறகு வைகையிலிருந்து பரளையாறு பிரிவிலிருந்து கிருதுமால்நதி, குண்டாற்றிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று கமுதி பகுதிக்கு தண்ணீர் வந்தடைந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் குண்டாற்று வழியாக கடலாடி மலட்டாறு, முதுகுளத்தூர் ரெகுநாத காவிரி, கூத்தன்கால்வாய் வழியாக தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட 3 தாலுகாவிலுள்ள ஆறு, கண்மாய், குளங்கள் முழுமையாக நிரம்பும் வாய்ப்புள்ளது. அதனை விவசாயத்திற்கு பயன்படுத்தினால் இந்தாண்டு இப்பகுதியில் விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர்.

மேலும் பஞ்சாயத்துகளின் கிணறு, ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்வதுடன், உவர்ப்பு தண்ணீரின் தன்மை மாறி, நல்ல தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் கோடையில் தண்ணீர் தட்டுபாடு நீங்கும் நிலை உள்ளது. எனவே வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்ட தமிழக அரசிற்கு விவசாயிகள், பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: