பழநி பகுதியில் ஒற்றை யானை அட்டகாசம் அதிகரிப்பு: தென்னை மரங்கள் சேதம்

பழநி: பழநி பகுதியில் ஒற்றை யானை அட்டகாசம் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனச்சரத்திற்குட்பட்ட மலையோர கிராமங்களில் கடந்த சில வருடங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. வனத்துறையினர் சோலார் மின்வேலி அமைத்தல், அகழி அமைத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் பலன் ஏதுமில்லை. பழநி வனச்சரக எல்லைகளில் உள்ள அணைகளில் நீர் நிரம்பி உள்ளன. இதனால் யானைகளின் பாதை தடைபட்டுள்ளது. இதன் காரணமாக சில யானைக் கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இதன்படி பழநி அருகே ெவட்டுகோம்பை பகுதியில் உள்ள செல்லப்பன் என்பவரது தென்னந்தோப்பிற்குள் புகுந்த ஒற்றை யானை அங்கிருந்த 7 தென்னை மரங்களை சாய்த்து சேதப்படுத்தின.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பழநி வனச்சரகர் பழனிக்குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் ஒற்றை யானையை காட்டிற்குள் விரட்டி அடித்தனர். ஒற்றை யானை நடமாட்டத்தால் வனச்சரக எல்லையோர கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து பழநி வனச்சரகர் பழனிக்குமார் கூறுகையில், யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கவும் பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் வனத்துறையினருடன், வேட்டை தடுப்பு காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சேதமடைந்த விவசாயிக்கு இழப்பீடு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மூதாட்டி குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்

கடந்த அக்டோபர் 1ம் தேதி மேய்ச்சலுக்கு சென்ற தேக்கந்தோட்டத்தைச் சேர்ந்த அந்தோணி மனைவி மரியபாக்கியம்(60) என்ற மூதாட்டி யானை மிதித்து உயிரிழந்தார். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் வனத்துறை அமைச்சரிடம் பரிந்துரை செய்தார். பழநி வனச்சரகர் பழனிக்குமார் நிவாரணத்தொகை பெறுவதற்கான வழிமுறைகளை விரைந்து முடித்து கொடுத்தார். இதன் பயனாக அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை உடனடியாக வழங்கியது. மரியபாக்கியத்தின் குடும்பத்தினர் உடனடியாக நிவாரணத்தொகை கிடைக்க உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories:

More