மாநிலங்களவையில் இருந்து 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய முடியாது!: அவை தலைவர் வெங்கய்ய நாயுடு திட்டவட்டம்..!!

டெல்லி: மாநிலங்களவையில் இருந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற முடியாது என வெங்கய்ய நாயுடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாராளுமன்ற குளிர்கால  கூட்டத்தொடரின் முதல்நாளான நேற்று மாநிலங்களவையின் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரின் போது அவையில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக அவர்கள் மீது இந்த கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவை தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்திருந்தார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பிக்களில் 6 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். சிவசேனா கட்சியை சேர்ந்த 2 பேர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தலா ஒருவர் ஆவர். 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த முறை நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டதாக கூறி எவ்வாறு இந்த கூட்டத்தொடரில் சஸ்பெண்ட் செய்ய முடியும்? இது வழக்கத்திற்கு மாறாக உள்ளது. நாடாளுமன்ற மரபுகளை காற்றில் விடப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சியினர், ஆளுங்கட்சியினர் மீது புகார் கூறி வருகின்றனர்.

இன்று காலை காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகா அர்ஜினா கார்கே, திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். அதில் 12 பேரின் சஸ்பெண்ட்சனை திரும்ப பெற மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை அவை கூடியதுமே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் ஒன்று திரண்டு 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என வெங்கய்ய நாயுடுவிடம் கோரிக்கை வைத்தார்கள்.

இதற்கு பதிலளித்த வெங்கய்ய நாயுடு, 12 எம்.பிக்கள் நாடாளுமன்றத்தின் மரபுகளுக்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்கள். மாநிலங்களவையின் மையப்பகுதிக்கு வந்து விதிகளுக்கு முரணாக கடுமையாக நடந்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். வெங்கய்ய நாயுடுவின் கருத்துக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் முழக்கத்துக்கு இடையே அவை தலைவர் வெங்கய்ய நாயுடு அவையை நடத்தி செல்கிறார். இதனை கண்டித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதை அடுத்து மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: