இளநீர் அறுவடை அதிகரிப்பு: மழையால் விற்பனை மந்தம் ஒரு இளநீர் ரூ.10 வரை விலை குறைந்தது: விவசாயிகள் வேதனை

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில்  உள்ள தென்னைகளில்  அறுவடை செய்யப்படும், செவ்விளநீர் மற்றும் பச்சை ரக இளநீர் உள்ளிட்டவை,  வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும், விற்பனைக்காக அனுப்பி  வைக்கப்படுகிறது. இந்த ஆண்டில், கடந்த தென்மேற்கு பருவமழையால்,  வெளியிடங்களுக்கு இளநீர் அனுப்பும் பணி குறைந்தது.  அதிலும், கடந்த  ஒரு மாதத்திற்கு மேலாக அடிக்கடி பெய்த பருவ மழையால், தமிழகத்தின் பல்வேறு  மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும்  இளநீர் அனுப்பும் பணி மிகவும்  குறைந்தது.  தற்போதைய சூழ்நிலையில், இளநீர் உற்பத்தி அதிகரித்தாலும்,  பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை மற்றும் பனிக்காலம் ஆரம்பத்தால்,  விற்பனை மந்தமாகியுள்ளது.

 இதன் காரணமாக, வெளியூர்களுக்கு இளநீர்  அனுப்பும் பணி குறைந்து, அவை தேக்கடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இளநீர்  உற்பத்தி அதிகரிப்பால், நேற்றைய நிலவரப்படி தோட்டங்களில் பண்ணை விலையாக  ஒரு இளநீர் ரூ.19ஆக சரிந்தது. ஒன்றரை மாதத்திற்கு முன்பு தோட்டங்களில்  நேரடி கொள்முதல் விலையாக ஒரு இளநீர் ரூ.29வரை இருந்தது.   ஆனால்  தற்போது இளநீர் ஒன்றுக்கு  ரூ.10 வரை குறைந்து, ரூ.19ஆக சரிந்துள்ளதால்,  உரிய விலை கிடைக்காமல் போவதாக, தென்னை விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இளநீர் தேக்கத்தை தவிர்க்க, கடந்த 2  வாரமாக பொள்ளாச்சியிலிருந்து  மும்பைக்கு கனரக வாகனங்கள் மூலம் இளநீர் அனுப்பும் பணி தீவிரமானதாக,  வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

More