உயிரின் பயம் அறியாமல் விளையாட்டு என்ற பெயரில்: பஸ், ரயில்களில் மாணவர்களின் சாகசங்கள் சம்பவம் அதிகரிப்பு: கல்வியாளர்கள் வேதனை

சேலம்: உயிரின் பயம் அறியாமல் விளையாட்டு என்ற பெயரில் மாணவ, மாணவிகள் பைக், பஸ், ரயில்களில் சாகசம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் தெரிவித்தார். நம் நாட்டில் 60 சதவீதம் பேர் 18 வயது முதல் 30 வயதுக்குள்ளவர்கள் உள்ளனர். இந்தியாவை பொருத்தமட்டில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் நாடாகும்.  இங்கு படித்தவர்கள் பலர் வெளிநாடுகளில் விஞ்ஞானம், மருத்துவம், தகவல் தொழில்நுட்ப துறை உள்பட பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். அதற்கு காரணம் இங்குள்ள கல்வி முறைதான். கல்வி கற்று வை. அவை என்றைக்கு ஒரு நாள் உனக்கு கை கொடுக்கும் என்று முன்னோர்கள் கூறி வருகின்றனர்.

அதற்கு ஏற்ப கடந்த 20 ஆண்டுகளில் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக படிக்காததோர் எண்ணிக்கை பத்து சதவீதத்திற்கும் கீழே சென்றுவிட்டது. தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் 65, கலை, அறிவியல் கல்லூரிகள் 578,  மருத்துவக்கல்லூரி 20, பல்மருத்துவக்கல்லூரி 18, மருந்தியல் கல்லூரி 41,  முடநீக்கு சிகிச்சை கல்லூரி 31, செவிலியர் பயிற்சி கல்லூரி 113, தொழில்வழி  சிகிச்சை கல்லூரி 2, இந்திய மருந்தியல் நிறுவனங்கள் 24, பொறியியல் மற்றும்  தொழில்நுட்ப கல்லூரி 472, பல் தொழில் நுட்ப கல்லூரி 366, விவசாயி கல்லூரி  11, கால்நடை மற்றும் மீன்வளம் கல்லூரி 4, சட்டக்கல்லூரி 9, சிறப்பு  கல்விக்கான கல்லூரி 172, கல்வியியல் கல்லூரி 645, தொழிற்பயிற்சி பள்ளிகள்  782, சிறப்பு பள்ளிகள் 88, பிற தொழில்கல்வி நிறுவனங்கள் 912, ெபாதுக்கல்வி  நிறுவனங்கள் (பள்ளிகள்) 53 ஆயிரத்து 631, மேல்நிலைப்பள்ளிகள் 5343,  உயர்நிலைப்பள்ளிகள் 4996, நடுநிலைப்பள்ளிகள் 9996, தொடக்கப்பள்ளி 33,326 உள்ளன.

படிக்கும் மாணவர்களுக்கு ஒழுக்கம் மிக முக்கியமானதாகும். அந்த ஒழுக்கத்தை தற்போது சில மாணவர்கள் கடைபிடிப்பதில்லை. ஒரு சில மாணவர்கள் பைக், பஸ், ரயில்களில் ஏறி விளையாட்டாக சாகசம் காட்டி வருகின்றனர். உயிரின் அருமை தெரியாமல் இவர்கள் விளையாட்டாக செய்யும் செயல் மற்ற மாணவர்களை அதே செயலை செய்ய தூண்டும் வகையில் உள்ளது என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த கல்வியாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில் 2000ம் ஆண்டு முன்பு இருந்து கல்வி முறை வேறு. இப்போது இருக்கும் கல்வி வேறாகும். 25 ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் பள்ளியில் ஆசிரியர், ஆசிரியைகள், தலைமையாசிரியர்களுக்கு மாணவ, மாணவிகள் பயந்து கொண்டிருந்தனர். அப்போது பள்ளியில் மாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியர் பிரம்பு எடுத்து அடிப்பார். எந்த மாணவர்களும் பெற்றோரிடம் புகார் கூறமாட்டார்கள். அப்படியே கூறினாலும் பெற்றோர் அதனை சீரியசாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.

அடியாத மாடு படியாது என்று கூறிவிடுவார்கள். இதனால் அப்போது ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு பயம் இருந்தது. ஒரு சில நேரங்களில் தலைமையாசிரியர் தேர்வு விடைத்தாள் கொண்டு வந்து மாணவர்களுக்கு வழங்குவார். அப்போது மதிப்பெண் குறைந்த மாணவர்களை தலைமையாசிரியர் அடிப்பார். மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று காரணத்திற்காக ஆசிரியர்கள் அடித்தனர். மற்றபடி மாணவர்கள் மீது ஆசிரியர்களுக்கு எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இல்லை. ஆனால் சமீப காலமாக ஆசிரியர்கள் சாதாரணமாக கையில் அடித்தால் கூட மாணவர்கள் பெற்றோரிடம் தெரிவிக்கின்றனர். மாணவர்களுக்கு ஆதரவாக பெற்றோர்களும் பள்ளிக்கு வந்து ‘ஏன் என் மகனை அடித்தீர்கள்’ என்று கேள்வி கேட்கின்றனர். சில இடங்களில் தகராறு ஏற்பட்டு போராட்டமே நடந்துவிடுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இது போன்ற சம்பவங்களால் மாணவர்களுக்கு ஆசிரியரின் மேல் இருந்த பயம் போய்விட்டது. மேலும் அரசும் மாணவர்களை ஆசிரியர்களை அடிக்கக்கூடாது என்று கூறி வருகிறது. இதுபோன்ற நடவடிக்கையால் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு சுத்தமாக பயம் போய், பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர், ஆசிரியைகளை வகுப்பு நேரத்தில் கூட கேலி, கிண்டல் செய்கின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு பள்ளி மாணவி ஓடும் ரயிலில் ஏறி ஒரு கால் ரயிலிலும், மற்றொரு கால் ரயில் நடைமேடையிலும் உரசியவாறு பயணம் செய்தார். அந்த மாணவிக்கு பின்னால் வந்த மாணவன் அதேபோன்ற காரியத்தை செய்தார். இந்த நிலையில் அரசு டவுன் பஸ் ஒன்றில் இரண்டு மாணவர்கள் கம்பி பிடித்து டயருக்கு அருகே சாகசம் காட்டினர். ஒரு பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது மாணவன் ஒருவன் செல்போனில் படம் எடுத்துக்கொண்டு ஆசிரியரை கேலி செய்துள்ளான்.

இதேபோல் பள்ளி மாணவி ஒருவருக்கு சீருடையில் வாலிபர் தாலி கட்டிய சம்பவம் நடந்தது. மேலும் பள்ளியில் மாணவ, மாணவிகள் டிக்டாக் வீடியோ எடுத்து மற்றவர்களுக்கு பரப்பி வருகின்றனர். இதேபோல் பல சம்பவங்கள் நடந்து வருகிறது. இதற்கு எல்லாம் காரணமாக இருப்பது ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு இருந்த பயம் போய்விட்டது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று முன்னோர்கள் கூறிய பழமொழியாகும். மாணவர்கள் சிறு வயதில் திருந்தவில்லை என்றால், எதிர்காலத்தில் அவர்களிடம் குற்ற செயல் அதிகரிக்க வாய்ப்புண்டு. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மேல் மதிப்பு ஏற்பட வேண்டும் என்றால், மாணவர்களை கண்டிக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு கல்வியாளர்கள் கூறினர்.

Related Stories:

More