ஜவ்வாதுமலை- சேர்க்கானூர் செல்லும் மண் சாலை சேறும், சகதியுமானதால் 45 கி.மீ தூரம் சுற்றிச்செல்லும் அவலம்

* சேற்றில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்

* தார்சாலை அமைக்க 16 மலை கிராமமக்கள் கோரிக்கை

திருப்பத்தூர்: ஜவ்வாது மலை- சேர்க்கானூர் செல்லும் மண் சாலை சேறும், சகதியுமானதால் 45 கி.மீட்டர் தூரம் வரை 16 மலை கிராமமக்கள் சுற்றிச்செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜவ்வாது மலை, புதூர் நாடு, ஏலகிரி மலை, நாயக்கநேரி மலை, கைலாசகிரி மலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜவ்வாது மலைப்பகுதியில் 16க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. 3 ஊராட்சிகள் உள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கொடுமாம்பள்ளி கிராமத்தின் அடிவாரத்தில் இருந்து ஜவ்வாதுமலை சேர்க்கானூர் வரை  4.5 கி.மீட்டர் தூரம் கடந்த 2012ம் ஆண்டு மண் சாலை அமைக்கப்பட்டது.

இந்த சாலையில் பைக், லாரி மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மண் சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கொடுமாம்பள்ளி-சேர்க்கானூர்  சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் வாகனங்கள் சேற்றில் சிக்கி கொள்கிறது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைகிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய பணிக்காகவும், மாணவ- மாணவிகள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இச்சாலை மண்சரிவால் துண்டிக்கப்பட்டதால் 16 கிராமமக்களும் தவித்து வருகின்றனர். திருப்பத்தூர் மற்றும் சிங்காரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல புதூர்நாடு வழியாக 45 கி.மீட்டர் தூரம் சுற்றி செல்கின்றனர். கனமழையால் ஆங்காங்கே சேறும், சகதியுமாக மாறியுள்ளது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். உடல்நிலை பாதித்தால் சேற்றின் வழியாக மருத்துவமனைகளுக்கு டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் சேர்க்கானூர்-ஜவ்வாதுமலை சாலையை ஆய்வு செய்து சாலை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More