உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் 4வது முறையாக: 142 அடியை எட்டியது பெரியாறு அணை: தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி

கூடலூர்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு 4வது முறையாக பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று 142 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க உச்சநீதிமன்றம் 2014, மே 7ம் தேதி உத்தரவிட்டது. அந்த ஆண்டு நவ. 21ம் தேதி அதிகாலை 2 மணியளவில் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இரண்டாவது முறையாக 2015, டிச. 7ல் அணை நீர்மட்டம் 142 அடி உயர்ந்தது. அடுத்த 2 ஆண்டுகள் பருவமழை ஏமாற்றியதால் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்த முடியவில்லை. பின்னர், 2018 ஆக. 16ல் மூன்றாவது முறையாக அணையின் நீர்மட்டம் 142.20 அடியானது.

2019ல் அதிகபட்சமாக 131.15 அடியும், 2020ல் அதிகபட்சமாக 137 அடியும் தண்ணீர் உயர்ந்தது. இந்த ஆண்டு பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி ‘ரூல் கர்வ்’ அட்டவணை விதிப்படி அணைநீரை சிறிது சிறிதாக உயர்த்தி வந்தனர். இதற்காக கூடுதல் நீர்வரத்து உபரி நீராக கேரள பகுதிக்கு வெளியேற்றப்பட்டு வந்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் 4வது முறையாக நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. நேற்றிரவு நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,322 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1,867 கனஅடியும், பெரியாறு அணை மதகுகள் வழியாக கேரள பகுதிக்கு வினாடிக்கு 135 கனஅடியும் உபரிநீராக திறக்கப்பட்டது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியானதையொட்டி, ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமையில், விவசாய சங்கத்தினர் லோயர்கேம்பில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுக் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து இன்று மரியாதை செய்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுகின்றனர்.

Related Stories:

More