×

4வது முறையாக 142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை!: தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி

திருவனந்தபுரம்: நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 4வது முறையாக 142 அடியை எட்டியதால் தென்மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,232 அடியாக உள்ளது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் இன்று அதிகாலை 142 அடியை எட்டியது. இதில் தமிழகத்திற்கு வினாடிக்கு 1,867 கனஅடி நீரும், கேரளாவுக்கு வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. 4வது முறையாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியிருப்பதால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து 1 வாரத்திற்கு 142 அடியாக பராமரிக்க வேண்டும் என்று அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையில், அணையின் உறுதித்தன்மையை கேரளாவுக்கு உணர்த்தும் வகையில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர். மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசின் கட்டுபாட்டில் உள்ள இந்த அணை, 2014, 2015, 2018ம் ஆண்டுகளில் நீர்மட்டம் 142 அடியை எட்டியது.

அதன் பின்னர் கேரளாவை சேர்ந்த ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ரூல்கோ முறை அமல்படுத்த உத்தரவிட்டது. நவம்பர் மாதங்களில் 142 அடி தண்ணீரை தேக்கி கொள்ளலாம் என்றும் அதில் கூறப்பட்டது. அதன்படி அணையில் தண்ணீரை தேக்கிக்கொள்ள சாத்தியக்கூறு இருந்ததாலும், நீர்வரத்துக்கு ஏற்ப உபரி நீரை கேரளாவுக்கு திறந்துவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 4வது முறையாக 142 அடியை எட்டியதை அடுத்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிப்பெரியார், சப்பாத்து, வல்லக்கடவு போன்ற பகுதிகளுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


Tags : Mullaiperiyaru Dam ,Tamil Nadu , 142 feet, Mullaiperiyaru Dam, farmers happy
× RELATED முல்லைபெரியாறு அணை அருகே புதிய அணை...