அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது :வானிலை ஆய்வு மையம்

சென்னை: வட கிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக தமிழகத்தில் தற்போது எல்லா இடங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்தது. இதுதவிர மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்தது. வட கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்தது.

சென்னையில் காலை, மதியம், இரவு என விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் சென்னை நகரில் பல இடங்கள் இன்னும் தண்ணீரில் தத்தளிக்கின்றன. இந்நிலையில், தெற்கு அந்தமான் கடலில் அருகே அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு, கிழக்கு திசையில் மத்திய வங்கக்கடலை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக டிசம்பர் 2, 3 தேதிகளில் ஆந்திரா, ஒடிசாவில் மிக பலத்த மழை பெய்யும் என்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டிற்கு மழை குறித்த எச்சரிக்கை எதுவும் இருக்காது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் நாளை மத்திய கிழக்கு அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதாகவும் அம்மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: