வேலை வாங்கி தருவதாக மோசடியில் கைது: எடப்பாடி பழனிசாமி உதவியாளரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

சேலம்: சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள, எடப்பாடி பழனிசாமியின் உதவியாளரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.  சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நடுப்பட்டியை சேர்ந்தவர் மணி (51), முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளரான இவர், அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் நேற்று முன்தினம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்ற நபர்களிடம், திரும்ப வழங்கி விட்டேன் எனக்கூறியுள்ளார்.

பின்னர், கைதான மணியை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அதிமுக பிரமுகர் செல்வகுமாரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் அவரை கைது செய்து விடுவோம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் வேலை வாங்கித் தருவதாகவும், பணியிட மாறுதல் பெற்றுத் தருவதாகவும் கோடிக்கணக்கில் அவர் பணம் வசூலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுதொடர்பாக இன்னும் தீவிரமாக விசாரிக்க வேண்டியிருப்பதால், அவரை காவலில் எடுக்க இருப்பதாக தெரிகிறது. இதனால், இன்னும் ஓரிரு நாளில் மணியை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ்அப்பில் வைரலாகும் துண்டுச்சீட்டு பட்டியல்

எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மணி, அதிமுக நிர்வாகிகள் பலரிடம் அரசு வேலைக்காகவும், சீட்டிற்காகவும் பணம் பெற்றதாக ஒரு துண்டுச்சீட்டு பட்டியல் வெளியாகி, வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த துண்டு சீட்டில், மணியின் பெயரை தலைப்பாக போட்டுள்ளனர். அதன்கீழ், அதிமுக முன்னாள் கவுன்சிலர், பகுதிச் செயலாளர், முன்னாள் எம்எல்ஏ, கூட்டுறவு சங்க தலைவர், அதிமுக மாணவரணி நிர்வாகி, ஜெ.பேரவை நிர்வாகி போன்றோரின் பெயர்களை குறிப்பிட்டு அரசு வேலைக்காகவும், தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகவும் 35.50 லட்சம் பணம் பெற்றது போல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சீட்டில் ஒரு தொகையை மட்டும் திருத்தி எழுதியுள்ளனர். இதனால், இந்தச்சீட்டின் உண்மை தன்மை என்னவென்று தெரியாமல் அதிமுக நிர்வாகிகளே குழம்பியுள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள  துண்டுச்சீட்டு பட்டியல் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில் ‘‘கைதான மணியிடம் அதிமுகவினர் பலரும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர். ஆனால், அவர்கள் தற்போது புகார் ஏதும் கொடுக்காமல் இருக்கின்றனர். புகார் கொடுத்தால், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.

Related Stories:

More