×

மதுரையில் இருந்து சென்னைக்கு ஓபிஎஸ் வந்த விமானத்தில் பயணி மர்ம சாவு: 2 மணிநேரம் தாமதமாக மும்பை சென்றது விமானம்

சென்னை: மதுரையிலிருந்து சென்னை வந்து மீண்டும் மதுரை செல்ல வேண்டிய ஏர் இண்டியா விமானம் நேற்று பிற்பகல் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. விமானத்தில்  அதிமுக ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 93 பயணிகள் இருந்தனர். நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்து தரையிறங்கியது. சென்னை பயணிகள் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைவரும் தரையிறங்கினர். ஆனால், ஒரு பயணி மட்டும் விமானத்திலிருந்து கீழே இறங்கவில்லை. ஏர் இண்டியா ஊழியர்கள், விமானத்திற்குள் ஏறி பார்த்தனர். அப்போது, மதுரையை சேர்ந்த சண்முகசுந்தரம் (72) என்ற பயணி மட்டும் அவரது இருக்கையில் சாய்ந்து கிடந்தார். ஊழியர்கள் அவரை எழுப்பினர். ஆனால் சுய நினைவு இல்லை.

இதையடுத்து விமான நிலைய மருத்துவக் குழுவினர் விமானத்திற்குள் ஏறி அவரை பரிசோதித்தனர். அப்போது, அவர் இறந்துவிட்டது  தெரியவந்தது. உடனடியாக, சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை விமானத்திலிருந்து இறக்கி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதற்கிடையே இந்த விமானம் நேற்று மாலை 3 மணிக்கு சென்னையிலிருந்து மும்பை புறப்பட்டுச் செல்ல வேண்டும். அந்த விமானத்தில் 115 பேர் பயணிக்க இருந்தனர். ஆனால் பயணி ஒருவர் விமானத்திற்குள்ளேயே இறந்து விட்டதால், விமானத்தை மும்பைக்கு இயக்க விமானி மறுத்துவிட்டார். இதையடுத்து விமானம் முழுமையாக கிருமி நாசினி, மருந்து ஸ்பிரே அடித்து சுத்தம் செய்யப்பட்டது. அதன்பின்பு 115 பயணிகளும் விமானத்தில் ஏற்றப்பட்டனர். விமானம் 2 மணி நேரம் தாமதமாக மாலை 5 மணிக்கு சென்னையிலிருந்து மும்பை புறப்பட்டுச் சென்றது.

Tags : Madurai ,Chennai ,Mumbai , Madurai, plane, traveler, mysterious death
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...