முந்தைய பதிவுகளை மிஞ்சியது: தமிழகத்தில் வரலாறு காணாத மழை: சென்னையில் மிக அதிகபட்சம் 1045 மிமீ

வடகிழக்கு பருவமழையில் இதுவரை பெய்யாத அளவுக்கு தமிழகத்தில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. வரலாறு காணாத இந்த மழையில் சென்னையில் மட்டும் இதுவரை 1045 மிமீ மழை பெய்துள்ளது. இது கடந்த 2015ம் ஆண்டு பதிவான 1049 மிமீ அளவை எட்டிப் பிடித்துள்ளது. இன்னும் பெய்ய வேண்டிய மழைக்கு பிறகு,  மேற்கண்ட  அளவு இன்னும் எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தமிழகத்தில் அக்டோபர் தொடங்கி ஜனவரி வரை உள்ள 4 மாதங்கள் வட கிழக்கு பருவமழை காலமாக வைத்துள்ளனர். இந்த காலத்தில் தான் வட கிழக்கு திசையில் இருந்து வங்கக் கடல் வழியாக வருகின்ற காற்று  புயல்களாக மாறி மழை பெய்வதுடன், குறிப்பிட்ட சில இடங்களில் பலத்த சேதங்களை ஏற்படுத்தி செல்வதும் உண்டு. கடந்த 30 ஆண்டுக்கு முன்பெல்லாம் வங்கக் கடலில் புயல் வந்தால் அது நாகப்பட்டினத்தைதான் குறிவைத்து தாக்கும். ஆனால், பசிபிக் கடல் பகுதியில் அடிக்கடி ஏற்படும் எல்-நினோ, லா-நினோ மாற்றங்களால் வானிலையில் அடிக்கடி வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் வங்கக் கடலில் கடந்த ஆண்டுகளில் உருவான புயல்கள் குறிப்பிட்ட பகுதியில் நுழையாமல் எதிர்பாராத பகுதிகளின் ஊடே தமிழகத்தில் நுழைந்து  சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. தானே, கஜா புயல்களின் தாக்கங்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அவை கடந்து சென்ற சுவடுகள் இன்னும் தமிழகத்தில் நாம் பார்க்கலாம்.

 புயல்களின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வோர் ஆண்டும் வட கிழக்கு பருவமழை காலத்தில் சற்று அச்சத்துடன் தான் இருப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கினாலும், இதுவரை புயல்கள் ஏதும் உருவாகாமல் வெறும் காற்றழுத்தங்களோடு மழையை கொடுத்துக் கொண்டு இருக்கின்றன. அக்டோபர் மாதத்தில் இயல்பாக 177.6 மிமீ மழை பெய்ய வேண்டும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 228.6 மிமீ மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 29 மிமீ அதிகம். சென்னையில் அக்டோபர் மாதம் இயல்பாக 275 மிமீ மழை பெய்ய வேண்டும்.  இந்த வருடம் அக்டோபரில் 215 மிமீதான் மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 22 சதவீதம் குறைவாக இருந்தது. சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டில் 3 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 9 சதவீதம் குறைவாகவும், காஞ்சிபுரத்தில் 14 சதவீதம் அதிகமாகவும்  பெய்துள்ளது.

ஆனால் நவம்பர் மாதம் அப்படி இல்லை. நவம்பர் முதல் வாரத்தில் வங்கக் கடலில் தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்று சுழற்சி மெல்ல வலுப்பெற்று தமிழக கடலோரப் பகுதியை நெருங்கி வரும்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. அப்போது தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. நவம்பர் 1ம் தேதி தமிழகத்தில் 26 மிமீ அளவுக்கு மழை பெய்தது. 10ம் தேதி 24 மிமீ பெய்தது. அதற்கு பிறகு தொடர்ந்த மழை 20ம் தேதி 32 மிமீ  பெய்தது. 26ம் தேதி 40 மிமீ வரை எட்டியது. இந்நிலையில், தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான கடலுடன் இணைந்த இரண்டு காற்று சுழற்சியின் காரணமாக தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது. அதில்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 300 மிமீ வரை மழை பெய்தது. பின்னர் அந்த காற்று சுழற்சி இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையில் வந்ததால் தமிழக கடலோரப் பகுதியில் மீண்டும் பலத்த மழை கொட்டத் தொடங்கியது.  தமிழகத்தின் பருவமழையை பொருத்தவரையில் எப்போதெல்லாம் மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்தம் வருகிறதோ அப்போது வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்பது எழுதப்படாத விதி. அதன்படி, நவம்பர் 26ம் தேதிக்கு பிறகு வடதமிழகத்தில் மழை கொட்டத் தொடங்கியது. இதற்கு  காரணம் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையில் காற்று சுழற்சி நிலை கொண்டதுதான். அது இன்னும் அதே இடத்தில் நீடித்து வருகிறது. இது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியாக இல்லாமல் கடலுடன் இணைந்த காற்று சுழற்சியாக நீடித்து வருவதுதான் காரணம். இதன் காரணமாக தமிழகம் எங்கும் மழை கொட்டி வருகிறது.

 இதன் காரணமாக எங்கு பார்த்தாலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. பல இடங்களில் நீர் நிலைகளில் உடைப்பு எடுத்து ஊர்களுக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் பொதுமக்கள் வாழ்விடங்களிலும் மழை நீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மழை நீரை வெளியேற்றும் பணிகளை தொடங்க முடியாத அளவுக்கு மழை பெய்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் வழக்கமாக மழை பாதிப்புகள் ஏற்படும் இடங்கள் என்று இல்லாமல் எல்லா இடங்களிலும் இப்போது மழை நீர் புகுந்துள்ளது.  கடந்த 200 ஆண்டுகளில் சென்னை சந்திக்காக மழையை இப்போது சந்தித்துள்ளது. அதற்கு சான்றாக, சென்னையில் நவம்பர் 29ம் தேதி காலை வரை 1031 மிமீ மழை பெய்திருந்த நிலையில், நேற்று பெய்த மழையுடன் சேர்த்து  1045 மிமீ மழை பெய்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் சென்னையில் 1049 மிமீ மழையும், கடந்த 1918ம் ஆண்டில் 1088 மிமீ மழையும்  அதிகமாக கணக்கிடப்பட்டு இருந்தது. கடந்த 200 ஆண்டுகளில் 4வது முறையாக சென்னை 1000 மிமீ மழையை இப்போது கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் நேற்றும் சென்னை மற்றும் புறநகரில் மழை பெய்தது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 4500 கன அடி நீர் வருகிறது. அங்கிருந்து வினாடிக்கு 3000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோல பூண்டி நீர்த் தேக்கத்துக்கு 27000 கன அடி நீர் வருகிறது. அங்கிருந்து வினாடிக்கு 25000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், குமரிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி வடக்கு மற்றும்வட மேற்கு திசையில் நகர்ந்து அரபிக் கடல் வழியாக செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது அதன் காரணமாக வட தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் மாவட்டங்களில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் அந்தமான் பகுதியில் காற்றழுத்தம் உருவாகி தமிழக கடலோரப் பகுதிக்கு வரும் என்றும் கணித்துள்ளனர். அதனால் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இது போன்ற காற்றழுத்தங்கள் அடுத்தடுத்து ஜனவரி மாதம் வரை வரும் என்றும் நீண்ட கால வானிலை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் மேலும் மழை பெய்து வரலாறு காணாத மழையை சந்திக்க உள்ளது. டிசம்பர் மாதத்தில்  மேலும் சில காற்றழுத்தங்கள் வர உள்ளன. கடந்த 2020ம் ஆம்டில் 2 மற்றும் 3ம் தேதிகளில் மன்னார் வளைகுடாவில் நிலை கொண்ட புயல் சின்னம் மேலும் வலுப்பெற்று தமிழகத்துக்குள் நுழைந்தது. அதன் காரணமாக 3ம் தேதி முதல் தமிழகத்தில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. அதன் காரணமாக நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், வேதாரண்யம் மாவட்டங்களில் 200 மிமீ மழை பெய்தது.

டிசம்பர் 4ம் தேதி கொள்ளிடத்தில் 360 மிமீ, சிதம்பர் 340 மிமீ, பரங்கிப்பேட்டை 260மிமீ, திருத்துறைப்பூண்டி 220 மிமீ, சேத்தியாதோப்பு 210மிமீ, ராமேஸ்வரம் 200 மிமீ, ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது. இதனால் அந்த பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வர உள்ள டிசம்பர் மாதம் உருவாகும் காற்றழுத்தங்களால் மேலும் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

Related Stories: