×

அரியானா முதல்வருடன் `திடீர்’ சந்திப்பு: `பாஜ ஆதரவுடன் பஞ்சாபில் ஆட்சி அமைப்பேன்: அமரீந்தர் சிங் பரபரப்பு பேட்டி

சண்டிகர்: `பஞ்சாபில் பாஜ ஆதரவுடன் எனது கட்சி ஆட்சி அமைக்கும்’ என்று அம்மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் சூளுரைத்துள்ளார்.  பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் காங்கிரஸ் மூத்த தலைவரும் பஞ்சாப் முன்னாள் முதல்வருமான அமரீந்தர் சிங் பதவி விலகினார் மேலும்  கட்சியை விட்டும் விலகினார்.  அதன் பிறகு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி என அமரீந்தர் அடுத்தடுத்து பாஜ தலைவர்களை சந்தித்ததும், அவர் பாஜ.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், `தான் பாஜ.வில் சேரப்போவதில்லை. புதிய கட்சி தொடங்க இருக்கிறேன்’ என்று அமரீந்தர் அதிரடியாக அறிவித்தார். அதே நேரம், விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றினால் பாஜ.வுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனிடையே, கடந்த 2ம் தேதி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். பஞ்சாப் தேர்தலில் 117 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இந்நிலையில், அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரை அமரீந்தர் சிங் நேற்று சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், `முதல்வர் மனோகர் லால் கட்டாரை சந்தித்தால் அது அரசியலாக தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பணி நடந்து வருகிறது. கடவுளின் ஆசி இருந்தால், பாஜ., சுக்தேவ் சிங்கின் தின்ட்சா கட்சியுடனான தொகுதி பங்கீடு நல்லபடியாக முடிந்தால், அடுத்த ஆட்சி அமைப்போம்,’ என்று தெரிவித்தார்.

Tags : Aryana ,Bhaja ,Amarindar Singh Bharaprabha , Amarinder Singh, sensational interview
× RELATED நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும்...