×

ஜெ. வீடு அரசுடமை ரத்து எதிர்த்து அதிமுக மேல்முறையீடு: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலம்: ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமை ரத்து எதிர்த்து அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக சார்பில் நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருப்ப மனுக்களை பெற்றார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அறுவடைக்கு தயாராக இருக்கிற நிலங்களுக்கு ஹெக்டேருக்கு 60 ஆயிரம் வழங்க வேண்டும். மத்திய குழு ஆய்வு செய்து சென்ற பிறகு கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. எனவே 2வது முறையாகவும் சேதங்கள் கணக்கிடப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அம்மா உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் குறைப்பு சம்பளம் குறைப்பு என அம்மா உணவகத்தை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அம்மா உணவகத்தை தொடர்ந்து நடத்தவேண்டும். அதேபோல அம்மா மினி கிளினிக்குகளை மூடுகின்ற சூழலை உருவாக்கியுள்ளனர். அதனையும் அரசு கைவிட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அதிமுக தொண்டர்களின் கோயிலாகும். அதனை பொதுமக்கள் அனைவரும் பார்த்துச் செல்லும் வகையில் அரசுடமையாக்கினோம். தற்போது நீதிமன்றம் அரசுடமையை ரத்து செய்துள்ளது. இதுகுறித்து ஓபிஎஸ் மற்றும் நிர்வாகிகளிடம் கலந்து பேசி அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். 1ம் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை செய்வோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அன்வர்ராஜா குற்றச்சாட்டு எடப்பாடி பதில்
முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா கட்சி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளாரே? என்று கேட்டதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி ‘‘எங்கு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்? யாரிடம் குற்றச்சாட்டை தெரிவித்தார்? பத்திரிகை ஊடகத்தில் தவறாக கூறுகின்றனர். அனைவரின் கருத்துகளையும் கேட்கக் கூடிய கட்சி அதிமுக. அதிமுக ஜனநாயக கட்சி. சில கருத்துகள் ஏற்புடையதாக இருக்கும். சில கருத்துகள் மறுக்கப்படும். இதெல்லாம் எங்க உட்கட்சியில் இருக்கக் கூடிய சம்பவங்கள். கட்சி ஆரோக்கியமாக வளர வேண்டும் என்றால் அனைவரின் கருத்துகளும் கேட்கப்படும்’’ என்றார்.

Tags : J. AIADMK ,Edappadi Palanisamy ,Salem , J. House, AIADMK, Appeal, Edappadi Palanisamy, Interview
× RELATED எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்...