ரேக்ளா தொடர்பான மனுவின் நகலை தமிழகம் கர்நாடக மாநிலங்களுக்கு வழங்க மகாராஷ்டிராவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:   மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டு ரேக்ளா உள்ளிட்ட பந்தயங்களுக்கு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நிரந்தர சட்டத்தை உருவாக்கியுள்ளது.  தமிழகத்தை முன்னுதாரணமாக வைத்து மகாராஷ்டிராவிலும் அந்த மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த ரேக்ளா விளையாட்டு பந்தயத்துக்கான போராட்டங்கள் தொடங்கியிருக்கின்றன. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் ரேக்ளா விளையாட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநில அரசு தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர் மற்றும் சி.டி.ரவிக்குமார் தரப்பில் நேற்று விசாரனைக்கு வந்தது. அப்போது மகாராஷ்டிரா மாநில அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்தில் ‘ ரேக்ளா விளையாட்டு என்பது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வராது. இதனால் விலங்குகள் துன்புறுத்தப்படுவதும் இல்லை. குறிப்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இன்றளவும் ரேக்ளா விளயாட்டுக்கள் நடைமுறையில் இருந்து வருகிறது என தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநில அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சச்சின் படேல் வாதாடுகையில் ‘‘தமிழக அரசு தரப்பில் பெறப்பட்டுள்ள சிறப்பு சட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தான் அனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால் அங்கு ரேக்ளா பந்தயமும் நடைபெறுகிறது. அது எப்படி?’’ என கேள்வி கேட்டார். இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ரேக்ளா விளையாட்டு தொடர்பாக மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை தமிழகம் மற்றும் கர்நாடகா அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்குங்கள். இதையடுத்து அவர்கள் அதனை பரிசீலனை செய்து பதிலளிக்கட்டும் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: