பிரபல நகைகடை உரிமையாளரிடம் மோசடி புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை: கொச்சியில் நடந்தது

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த பிரபல நகை கடை உரிமையாளரிடம் மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொச்சியில் அமலாக்கத்துறையினர் 9 மணி நேரம் துருவி துருவி விசாரணை நடத்தினர். கேரளாவில் உள்ள ஒரு பிரபல நகை கடையில் இருந்து கடந்த 2016ம் ஆண்டு ஆலப்புழாவில் வசிக்கும் சர்மிளா என்பவர் ₹2.5 கோடிக்கு தங்கம் வாங்கியுள்ளார். இதற்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நகை கடை நிறுவனம் சார்பில் அங்கமாலி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதுதொடர்பாக சர்மிளாவிடம் முதலில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தங்கத்தை தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொடுத்தாகவும் அவர்தான் தனக்கு பணம் தராமல் ஏமாற்றியதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் கருப்பு பணம் கையாளப்பட்டிருப்பதாக கொச்சியில் உள்ள மத்திய அமலாக்கத்துறைக்கு புகார் கிடைத்தது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள்  சர்மிளாவிடம்  விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த அமலாக்க துறை தீர்மானித்தது. அவரை விசாரணைக்கு ஆஜராக  நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி நேற்று காலை 10 மணியளவில் விஜயபாஸ்கர் ெகாச்சி அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் இரவு 7 மணிவரை துருவி துருவி விசாரணை நடத்தினர். 7 மணிக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். தேவைப்படும் போது மீண்டும் ஆஜராக வேண்டும் எனறு அதிகாரிகள் தெரிவித்தனர். வெளியே வந்த முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் ‘இது பொய்யான வழக்கு. நான் எந்த தவறும் செய்யவில்லை’ என்று கூறினார்.

இது குறித்து விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கை: ‘கேரளாவை சேர்ந்த சர்மிளா என்பவர் ஏற்கனவே நெல்லையில் என்மீது உண்மைக்கு மாறான அவதூறு செய்தியை தெரிவித்து பொய்யான புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த அவதூறு தொடர்பாக அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர என்னுடைய வழக்கறிஞர் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளேன். பல குற்ற பின்னணி உடைய சர்மிளா தொடர்பாக அமலாக்கத்துறையில் இருந்து அழைப்பாணை வந்ததின் பெயரில் சாட்சியாக நேரில் ஆஜராகி உரிய விபரம் தெரிவித்துள்ளேன்’. என கூறியுள்ளார்.

Related Stories:

More