அனைத்து உலக நாடுகளும் தயாராக வேண்டும்: மிக அபாயகரமானது: எங்கும் பரவும் ஒமிக்ரான்

வாஷிங்டன்: ‘புதிய வகை ஒமிக்ரான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளது. மிக அதிக அபாயகரமான இந்த வைரஸ் சில பகுதிகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். எனவே புதிய வைரசை எதிர்கொள்ள உலக நாடுகள் கட்டாயம் தயாராக வேண்டும்’ என்ற உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை பீதியை கிளப்பி உள்ளது. கொரோனா வைரஸ்களிலேயே மிக அதிகளவில் 50 பிறழ்வுகளுடன் புதிய வகை வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கடந்த 24ம் தேதி கண்டறியப்பட்டது. கவலைதரும் வைரசாக இதை வகைப்படுத்திய உலக சுகாதார நிறுவனம் ‘ஒமிக்ரான்’ என பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் கண்டறியப்பட்டு உலக நாடுகள் சுதாரிப்பதற்குள் பல நாடுகளில் பரவி விட்டது. தற்போது ஆஸ்திரேலியா பெல்ஜியம் போட்ஸ்வானா கனடா டென்மார்க் பிரான்ஸ் ஜெர்மனி ஹாங்காங் இஸ்ரேல் நெதர்லாந்து போர்ச்சுகல் ஸ்காட்லாந்து தென் ஆப்ரிக்கா செக் குடியரசு சுவிட்சர்லாந்து இங்கிலாந்து நாடுகளில் ஒமிக்ரான் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகள் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு பயண தடை விதித்துள்ளன.

இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒமிக்ரான் வைரஸ் இதுவரை இல்லாத அளவுக்கு ஸ்பைக் புரதத்தில் அதிகமான பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. இதனால் தடுப்பூசி மற்றும் முந்தைய நோய் தொற்றுகளால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் திறன் கொண்டிருக்கிறது. இதுவரை ஒமிக்ரான் வைரசால் எந்த உயிர் பலியும் ஏற்படவில்லை. ஆனாலும் இது வேகமாக பரவி வருகிறது. இதன் பிறழ்வுகள் மிக அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் சாத்தியத்துடன் காணப்படுகின்றன. எனவே உலக நாடுகள் புதிய வைரசை எதிர்கொள்ள தயாராக வேண்டும். இந்த வைரஸ் உலகெங்கும் பரவும் அபாயகரமானதாக உள்ளது. சில பகுதிகளில் கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். எனவே அனைத்து நாடுகளும் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக் கூடிய அபாயம் இருப்பதால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு எச்சரித்துள்ளது. இதன் காரணமாக உலக நாடுகள் பலவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்தியாவிலும் ஆபத்தான நாடுகள் என வகைப்படுத்தப்பட்ட நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் ஒமிக்ரான்?: அமைச்சர் மறுப்பு

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறுகையில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடகா வந்துள்ள 2 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அது டெல்டாவில் இருந்து வேறுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து ஒன்றிய அரசு அதிகாரிகளுக்கும் ஐசிஎம்ஆருக்கும் தகவல் கொடுத்துள்ளோம். 63வயதான ஒருவரின் அறிக்கை வேறு மாதிரியாக இருக்கிறது. ஆனால் அது ஒமிக்ரான் பாதிப்பா என்று நிபுணர்களுடன் ஆலோசிக்கப்படும். என்னுடன் படித்த நண்பர்கள் தென்ஆப்ரிக்காவில் உள்ளார்கள். அவர்களுடன் பேசியதில் டெல்டா வைரஸ் போன்று ஒமிக்ரான் மோசமானது இல்லை. சோர்வு வாந்தி பல்ஸ் அதிகரித்தல் ஏற்படும் என்று கூறினார்கள்’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* அதிகமான சோர்வு

* தசைகளில் வலி

* கரகரப்பான தொண்டை

* வறட்டு இருமல்

ஒரு சிலருக்கு மட்டுமே அதிக வெப்பநிலையுடன் காய்ச்சல் ஏற்படுகிறது. பெரும்பாலானோருக்கு பொதுவான அறிகுறிகள் மட்டுமே காணப்படுகின்றன. டெல்டா வகை வைரஸ் போல ஆக்சிஜன் பாதிப்பு போன்ற பெரிய அளவிலான பாதிப்பை ஒமிக்ரான் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தெ.ஆப்ரிக்காவிலிருந்து வந்தவருக்கு தொற்று

மகாராஷ்டிரா மாநிலம் தானே டோம்பிவிலி பகுதியைச் சேர்ந்த 32 வயது நபர் சமீபத்தில் தென் ஆப்ரிக்கா சென்று கடந்த 24ம் தேதி துபாய் டெல்லி வழியாக சொந்த ஊர் திரும்பி உள்ளார். இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. உடனடியாக அந்த நபரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு எந்த வகை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது என்பதை கண்டறிய புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் யாருக்கும் ஒமிக்ரான் வகை வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை.

மாநிலங்களுக்கு 137 கோடி தடுப்பூசி

ஒன்றிய சுகாதார அமைச்சக அறிக்கை: ‘இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 137 கோடியே ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 70 தடுப்பூசி டோஸ்கள் ஒன்றிய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும்  வழங்கப்பட்டுள்ளன. இதில் 24 கோடியே 61 லட்சத்து 87 ஆயிரத்து 131 தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களிடம் இன்னமும் இருப்பு உள்ளன’ என தெரிவித்துள்ளது.

எல்லையை மூடியது ஜப்பான்

ஒமிக்ரான் பரவலை தடுக்க ஜப்பான் தனது நாட்டு எல்லையை மூடுவதாக நேற்று அறிவித்தது. எந்த வெளிநாட்டவர்களும் ஜப்பானுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் கை சுத்தத்தை பராமரிக்க வேண்டும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அந்நாடு எச்சரித்துள்ளது.

உச்சநீதிமன்றம் கேள்வி

உச்சநீதிமன்றத்தில் டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ‘புதுவகை கொரோனா புதிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு என்ன செய்யப்போகிறது?’ எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு விளக்கமளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ‘புதிய வைரசை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது’ எனக் கூறினார்.

Related Stories: