80 அடி கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி பத்திரமாக மீட்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே  ஆளவந்தார் மேடு கிராமத்தை சேர்ந்தவர் சீதாராமன். இவருக்கு சொந்தமான கன்றுக்குட்டி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் கன்றுக்குட்டி வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் உள்ள சுமார் 80 அடி ஆழத்தில் தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணற்றில் கன்றுக்குட்டி தவறி விழுந்தது. அதனால் வெளியே வர முடியாமல் உயிருக்கு போராடியது.

இந்தவேளையில் கன்றுக்குட்டியை காணாமல் தாய் பசு இரவு பகலாக கத்திகொண்டே இருந்தது. இதனால் அதன் உரிமையாளர் சீதாராமன் அப்பகுதி முழுவதும் தேடினார். கன்றுக்குட்டி கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த கிணற்றில் நேற்று பார்த்தபோது கன்றுக்குட்டி இருப்பது தெரிந்தது. தகவலறிந்து காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து உதவி மாவட்ட அலுவலர் சக்திவேல்  தலைமையில் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று கன்றுகுட்டியை கயிறுகட்டி உயிருடன் மீட்டனர். அப்போது கன்றுகுட்டியை கண்டவுடன் தாய்பசு கண்ணீருடன் தழுவிய காட்சி அங்கிருந்த அனைவரையும் நெகிழ செய்தது.

Related Stories: