ஒன்றிய குழு தலைவர் துணைத்தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

செய்யூர்: தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் கடந்த அக்டோபர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதனை தொடர்ந்து அந்த 9 மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களில் ஒன்றிய குழு தலைவருக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 22ம் தேதி நடத்தப்பட்டது. அப்போது சில இடங்களில் தேர்தல் குளறுபடி காரணமாக தேர்தல் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியத்தில் ஒன்றிய தலைவர் தேர்தலின்போது தேர்தல் குளறுபடி ஏற்பட்டது. இதனால் இந்த ஒன்றியத்தில் நடக்க இருந்த ஒன்றிய குழு தலைவர் தேர்தல் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் லத்தூர் ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தல் நேற்று காலை நடந்தது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட  சுப்புலட்சுமி பாபு 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து திமுக நிர்வாகிகள் அவருக்கு மாலை மற்றும் சால்வைகள் அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தனர். தொடர்ந்து நேற்று மதியம் துணை தலைவர் தேர்தல் நடந்தது. இதில் திமுகவை சேர்ந்த கிருஷ்ணவேணி தணிகாசலம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில் ஒன்றியக்குழு பெருந்தலைவர் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டது. தேர்தல் அலுவலராக ரவிச்சந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் தேர்தலை நடத்தினர். வேட்பாளர்களாக தேவேந்திரன் சஞ்சய் காந்தி ஆகியோர் போட்டியிட்டனர். இத்தேர்தலின் முடிவில் தேவேந்திரன் ஒன்றியக்குழு பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து மதியம் நடந்த துணை தலைவர் மறைமுகத் தேர்தலில் சேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து வாலாஜாபாத் ஒன்றியத்தை திமுக கைபற்றியது. அவர்களது ஆதரவாளர்கள் வாண வேடிக்கைகள் முழங்க மலர் மாலை மற்றும் சால்வைகள் அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் உள்ள 2 மாவட்ட கவுன்சிலர் 26 ஒன்றிய கவுன்சிலர் 54 ஊராட்சி மன்ற தலைவர் 408 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடந்தது. இதைதொடர்ந்து 54 ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் அக்டோபர் 22ம் தேதி நடந்தது. இதில் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் பொன்பதர் கூடம் பட்டிக்காடு நல்லூர் ஆகிய ஊராட்சிகளில் குறைந்த வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டதால் துணை தலைவர் தேர்ந்தெடுக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மேற்கண்ட 3 ஊராட்சிகளில் துணை தலைவர் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. அதில் பொன்பதிர் கூடம் ஊராட்சி துணை தலைவராக சுந்தரி  நல்லூர் ஊராட்சி துணை தலைவராக உமா பட்டிக்காடு ஊராட்சி துணை தலைவராக பூங்கொடி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 ஊராட்சி துணை தலைவர்களும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More