திருப்போரூர் அருகே பரபரப்பு: கால்வாயில் மிதந்து வந்த சிசு சடலம்

திருப்போரூர்: திருப்போரூர் அருகே ஆலத்தூர் கிராமத்தில் நேற்று காலை கால்வாயில் பிறந்து சில மணி நேரமே ஆன சிசு சடலம் மிதந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் உள்ள தலையாரி தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று காலை அங்குள்ள மழைநீர் கால்வாயில் தொப்புள் கொடியுடன் குழந்தை சடலம் மிதந்து கிடந்தது. 6.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே வந்த சிலர் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து திருப்போரூர் எஸ்ஐ விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் மாமல்லபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது கால்வாயில் சடலமாக கிடந்தது ஆண் குழந்தை என்றும் பிறந்து சில மணி நேரங்களே ஆகியிருக்கும் என தெரிந்தது. இதையடுத்து மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் ஆலத்தூர் கிராமத்தில் கர்ப்பிணியாக இருந்தவர்கள் குறித்து சுகாதாரத் துறையினருடன் விசாரித்தனர்.

தொடர்ந்து ஆலத்தூர் கிராம விஏஓ செண்பகவள்ளி புகாரின் பேரில் அப்பகுதியில் வீசப்பட்ட குழந்தை வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானதா அல்லது கள்ளத் தொடர்பால் பிறந்த குழந்தையா என தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories:

More