பொதுமக்கள் முன்னிலையில் பெண் விஏஓவை தாக்க முயன்ற டிஆர்ஓ

ஸ்ரீபெரும்புதூர்: மழை வெள்ளம் பாதிப்பு பகுதியில் ஆய்வு செய்தபோது பொதுமக்கள் முன்னிலையில் பெண் விஏஓவை டிஆர்ஓ தாக்க முயன்றார். இதனால் விஏஓ தனது பணியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குன்றத்தூர் தாலுகா கொளப்பாக்கம் கிராமத்தில் விஏஓவாக பணியாற்றுபவர் பாரதி. இவரது எல்லைக்கு உட்பட்ட கொளப்பாக்கம் கிராமத்தில் மழைசேதம் ஏற்பட்டது. இதனை பார்வையிடவும் மழைநீர் வடிகால்வாய் ஆக்கிரமிப்பு பகுதிகளைம் ஆய்வு செய்ய காஞ்சிபுரம் டிஆர்ஓ. பன்னீர்செல்வம் நேற்று கொளப்பாக்கம் சென்றார். அப்போது ஆக்கிரமிப்பு குறித்து விஏஓ பாரதியிடம் அவர் விளக்கம் கேட்டுள்ளார். அவரது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பாரதி தடுமாறினார்.

இதனால் ஆத்திரமடைந்த டிஆர்ஓ பன்னீர்செல்வம் தனது கைகளை உயர்த்தி பெண் விஏஓவை பொதுமக்கள் முன்னிலையில் தாக்க முயன்றதாக தெரிகிறது. மேலும் அவரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. இதில் மனமுடைந்த விஏஓ பாரதி தனது பணியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதி அதனை ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ சைலேந்திரனிடம் கொடுத்தார். இதனால் இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓவிடம் விளக்கம் கேட்பதற்காக அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது எல்லைகோட்டுக்கு வெளியே இருப்பதாக தகவல் வந்தது.

Related Stories: