பெட்ரோலுடன் தண்ணீர் கலந்ததால் வாகனங்கள் பழுது: பங்க்கை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட ஆயில்மில் பகுதியில் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று மாலை 4 மணியளவில் தனியார் நிறுவன ஊழியர் சங்கர் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் சிறிது தூரம் சென்றவுடன் வாகனத்தில் அடைப்பு ஏற்பட்டு வாகனம் பழுதடைந்து நின்றது.

இதையடுத்து ஒரு மெக்கானிக் கடைக்கு சென்று மோட்டார் சைக்கிளை பரிசோதித்தபோது இன்ஜினில் தண்ணீர் இறங்கியுள்ளதாக கூறியுள்ளார். தண்ணீர் இறங்கிய காரணம் குறித்து ஆராய்ந்தபோது பெட்ரோலில் தண்ணீர் கலந்து இருப்பது தெரியவந்தது. அவர் பெட்ரோல் பங்கிற்கு சென்று கேட்டுள்ளார். இதேபோல் பலரது வாகனங்களும் பழுதடைந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்தவர்கள் பெட்ரோலில் தண்ணீர் கலந்து வந்ததால் மோட்டார் சைக்கிள் பழுது ஏற்பட்டுள்ளதாக கூறி பெட்ரோல் பங்கு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் அங்கு வந்து அவர்களை சமாதானம் செய்தனர்.

இதுகுறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் போலீசார் கேட்டபோது சென்னையில் இருந்து வந்த பெட்ரோலில் தண்ணீர் கலந்து வந்ததாகவும் அதனால் 5 மணியளவில் பெட்ரோல் போடுவதை நிறுத்தியதாகவும் தெரிவித்தனர். மழை காரணமாக இதுபோல் பல இடங்களில் பிரச்னை ஏற்பட்டு வருவதாகவும் கூறினார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் வாகனத்தை சரி செய்து தருகிறோம் என்றும் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: