ராணுவ நிலத்தில் ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது: 8 வாரத்தில் ஒப்படைக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள துளசிங்கபுரம் பகுதியில் உள்ள நிலத்தை 1987ல் அரசு புறம்போக்கு நிலமாக அறிவித்ததை ரத்து செய்து அப்பகுதியில் சாலை அமைக்கவும் மாநகராட்சி நிலம் என அறிவிக்கவும் உத்தரவிடக் கோரி சிங்காரவேலு என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அளித்த உத்தரவு வருமாறு: குறிப்பிட்ட நிலம், ராணுவ நிலம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலம்தான். ராணுவத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதி என கூறுவதால் அரசின் திட்டங்களின்படி மாற்று இடங்களை கண்டறிந்து இடம் கொடுக்கலாம். நாட்டை பாதுகாக்க பாடுபடும் ராணுவத்தினருக்கு சொந்தமான நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க கூடாது.

அந்த நிலத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு, சுற்றுச்சுவர் கட்டும் பணிகளை காவல்துறை உதவியுடன் முடிக்க வேண்டும். வளர்ச்சி நடவடிக்கை, சாலை விரிவாக்கம், உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்க நிலம் தேவை என்பதால் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த வேண்டியது அவசியம். அரசின் நலத்திட்டங்களில் பலனடைய தகுதி இருந்தால், அரசு மாற்று இடம் கொடுக்கலாமே தவிர, ராணுவ நிலத்தை  ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது.

சம்பந்தப்பட்ட நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை  8 வாரத்தில் அகற்றி அந்த நிலத்தை ராணுவத்திடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

More