கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட சென்னை-சிங்கப்பூர் விமான சேவை தொடக்கம்

சென்னை: கொரோனா பரவலால் ரத்து செய்யப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், 20 மாதங்களுக்கு பின்பு நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது. கொரோனா தொற்று கடந்த 2020ம் ஆண்டு விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. இதையடுத்து 2020, மார்ச் 25ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கான விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அதேபோல், சென்னையில் இருந்து செல்லும் அனைத்து சர்வதேச விமானங்களும் ரத்துசெய்யப்பட்டன. கடந்த 2020, மே 9ம் தேதி முதல், குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் வந்தே பாரத் மீட்பு விமானங்களும், சில சிறப்பு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த வாரம் ஒன்றிய அரசுக்கு எழுதிய கடிதத்தில், சென்னையில் இருந்து சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் தமிழர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். எனவே அந்த நாடுகளுக்கு மீண்டும் விமான சேவைகளை தொடங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். ஒன்றிய அரசு வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் அனைத்து சர்வதேச விமான சேவைகளும் இயங்க அனுமதி அளித்துள்ளது. அதோடு சிங்கப்பூர்-இந்தியா இடையே விமான சேவைகளை உடனடியாக தொடங்க அனுமதி அளித்துள்ளது.

அதன்பேரில் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று முதல் தினமும் விமான சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் தொடங்குகின்றன. சிங்கப்பூரில் இருந்து நேற்று மாலை 6 மணிக்கு புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், இரவு 10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. இந்த விமானம், மீண்டும் இரவு 11.15 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது. அதேபோல, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று மாலை 3 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 7 மணிக்கு சிங்கப்பூர் சென்றடைந்தது. அங்கிருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை வந்தது.  

20 மாதங்களுக்கு பின்பு மீண்டும் சென்னை-சிங்கப்பூர்-சென்னை இடையே நேரடி பயணிகள் விமான சேவைகள் தொடங்கியுள்ளன. இந்த விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி போட்டு, அதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அதோடு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் நெகட்டிவ் சான்றிதழும் அவசியம். சிங்கப்பூருக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு செல்லும் விமான பயணிகளுக்கும் இது இணைப்பு விமானமாக இருக்கும். இந்த விமான சேவையால் தமிழக பயணிகள் மட்டுமின்றி, ஆந்திரா, புதுச்சேரி, அந்தமான் பயணிகளுக்கும் மிகவும் வசதியாக இருக்கும். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நேற்று முதல் டெல்லி, மும்பையில் இருந்தும் சிங்கப்பூருக்கு நேரடி விமானங்களை இயக்க தொடங்கியது.

Related Stories: