தமிழகத்தில் 6 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க 14.27 லட்சம் பேர் விண்ணப்பம்: ஜனவரி 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்கம், திருத்தம் செய்ய கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 6 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் 14.27 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் பெயர் சேர்க்க மட்டும் 9.44 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தற்போது 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல் வருகிற 30ம் தேதி வரை புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அதன்படி, 1.1.2022 அன்று 18 வயது நிறைவடைய உள்ளவர்கள் மற்றும் அதற்கு மேல் வயதுடையவர்கள் இதுவரை தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாவிட்டால் புதிதாக பதிவு செய்யவோ அல்லது நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்வதற்கான விண்ணப்பத்தை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அலுவலகம் செல்பவர்கள் வசதிக்காக நவம்பர் 13, 14, 20, 21, 27, 28 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடந்தது.

அதன்படி முதல் இரண்டு நாட்கள் (13, 14ம் தேதி) முகாமில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய 5.90 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். 2வது கட்ட (20, 21ம் தேதி) சிறப்பு முகாமில் 8 லட்சத்து 59 ஆயிரத்து 580 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மட்டும் 6,14,166 பேரும், பெயர் நீக்கம் செய்ய 1,00,518 பேரும், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய 78,863 பேரும், வார்டு மாற்றம் செய்ய 66,033 பேர் என மொத்தம் 8 லட்சத்து 59 ஆயிரத்து 580 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இதை தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் கடந்த 27 மற்றும் 28ம் தேதி சனி, ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதன்படி, கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த 6 நாள் சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9,44,026 பேரும், பெயர் நீக்கம் செய்ய 2,20,034 பேரும், திருத்தம் செய்ய 1,50,919 பேரும், தொகுதி மாற்றம் செய்ய 1,12,609 பேர், வெளிநாடு வாழ் இந்தியர் 10 பேர் என மொத்தம் 14 லட்சத்து 27 ஆயிரத்து 598 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்கள் வீடுகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் நேரடியாக வந்து சோதனை செய்து, அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்திற்குள் முடிவடையும். இறுதி வாக்காளர் பட்டியல் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி வெளியிடும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.

சென்னை, செங்கை, காஞ்சி திருவள்ளூரில் எத்தனை பேர்?

மாவட்டம்    பெயர் சேர்த்தல்    நீக்கம்    திருத்தம்    தொகுதி மாற்றம்    NRI    மொத்தம்

சென்னை    27,262    2,951    5,604    4,143    0    39,960

செங்கல்பட்டு    49,227    2,334    5,337    4,782    0    61,680

காஞ்சிபுரம்    31,453    1580    2,613    2,077    2    37,725

திருவள்ளூர்    40,449    4,914    6,265    3,568    3    55,199

Related Stories: