தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் கண்டறியப்படவில்லை: தலைமை செயலாளர் தகவல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என அனைத்து மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்தார். தலைமை செயலகத்தில், தலைமைச்செயலாளர் இறையன்பு தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், ஒமிக்ரான் உருமாற்றம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இதை தடுக்க கொரோனா தடுப்பூசி மட்டுமே சிறந்த ஆயுதம் என்பதால், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பொது மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி 2 தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை. இது வராமலும், பரவாமலும் தடுக்க தமிழ்நாட்டிற்கு வரும் பன்னாட்டு விமானப் பயணிகளை தொடர்ந்து கண்காணித்தும், ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்தும், 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவித்தல் மற்றும் சமுதாய தடுப்பூசி நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற தொடர் தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் அன்றாடம் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் என தலைமை செயலாளர் வேண்டுகோள் விடுத்தார்.

 இந்த ஆய்வுக் கூட்டத்தில், காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர்/சிறப்பு பணி அலுவலர் செந்தில்குமார், பொதுத்துறை செயலாளர் டி.ஜெகந்நாதன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜாக்கப், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் செல்வ விநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: