தமிழக நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை: அமைச்சர் பேச்சு

சென்னை: திருவள்ளூர் அடுத்த பட்டரை பெரும்புதூர் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியின் 2வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு சட்டத்துறை செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். சட்டக்கல்வி இணை இயக்குநர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். சட்டக்கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டம், நீதிமன்றம், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புத்துறை அமைச்சரும், அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக இணைவேந்தருமான எஸ்.ரகுபதி கலந்துகொண்டு  506 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், 75வது ஆண்டு சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி பேசியதாவது: ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அந்தந்த தாய்மொழியே வழக்காடு மொழியாக இருந்து வருகிறது. இதேபோல், தமிழகத்திலும் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர, இந்திய அளவில் சிறந்த முதல்வராக விளங்கும் மு.க.ஸ்டாலின் முழு அளவில் முயற்சி மேற்கொண்டு வருகிறார். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை என்பது திமுகவின் லட்சியமாகும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே சூப்பர் முதல்வராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இந்தியாவிலே சமூக நீதிக்கு குரல் கொடுப்பது தமிழ்நாடு மட்டும்தான். சமூக நீதியை காப்பாற்றும் பொறுப்பு ஒவ்வொரு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் உண்டு.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: