×

உறுப்பினர்கள் வாக்களித்து ஒற்றை தலைமையை தேர்வு செய்ய வேண்டும் அதிமுக இரட்டை தலைமையின் கீழ் செயல்படுவதால் பாதகமே அதிகம்: அன்வர்ராஜா மீண்டும் போர்க் கொடி

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த வாரம் புதன்கிழமை சென்னையில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் எம்பி அன்வர் ராஜா பேசும்போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவரை ஒருமையில் பேசியதுடன், அவரை அடிக்கவும் சென்றதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பற்றி தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அன்வர் ராஜா கூறினார். அன்று நடந்த கூட்டத்தில் பலரும், அதிமுக கட்சியின் தலைமைக்கு எதிராக பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா மீண்டும் கட்சி தலைமையை விமர்சித்து வெளிப்படையாக பேட்டி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அன்வர்ராஜா நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தல், 2021 மே மாதம் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும், தோல்வியில் இருந்து சரியான பாடம் கற்றுக்கொள்ளவில்லை. கடந்த தேர்தலில் அதிமுக சரியான முறையில் கூட்டணி அமைக்கவில்லை. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கப்பட்டாலும், வட மாவட்டங்களில் உள்ள வன்னியர்களின் வாக்கு முழுமையாக அதிமுகவுக்கு கிடைக்கவில்லை. அதேநேரம் தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கும் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜ நீடித்தால் வாக்கு இழப்பு அதிமுகவுக்குதான். இதை கட்சி தலைமை புரிந்து செயல்பட்டிருக்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தலில் சசிகலாவை கட்சியில் சேர்த்திருந்தால், அதிமுகவுக்கு கூடுதலாக 20 இடங்கள் கிடைத்திருக்கும். ஆரம்பத்தில் சசிகலாவுக்கு தொண்டர்களிடம் எதிர்ப்பு இருந்தது. தற்போது அவருக்கு ஆதரவான அலை வீசுகிறது. டி.டி.வி.தினகரன் அதிமுகவில் இல்லை. அவர் அமமுகவை நடத்தி வருகிறார். அதிமுக இரட்டை தலைமையின் கீழ், செயல்படுவதால் சாதகங்களை காட்டிலும் பாதகங்களே அதிகம். இரண்டு பேரிடமும் கருத்திணக்கம் இல்லை. கட்சி உடைந்தால் சின்னம் முடக்கப்பட்டு விடும் என்பதால் இருவரும் விட்டு கொடுத்து வருகிறார்கள்.  

தற்போது அதிமுக தொண்டர்கள், அதிமுகவை வழிநடத்த ஒற்றை தலைமைதான் வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து ஒற்றை தலைமையை தேர்வு செய்ய வேண்டும். கட்சியில் தனிப்பட்ட லாப, நஷ்ட கணக்கை நான் பார்க்கவில்லை. இனிமேல் இழப்பதற்கு எதுவும் இல்லை. 1965 முதல் அரசியலில் இருக்கிறேன். எம்ஜிஆர் அதிமுகவை 1972ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து கட்சி பணியாற்றி வருகிறேன். இப்போது அதிமுக கட்சி அவலமான நிலையில் உள்ளது. என்னால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால்தான் ஒற்றை தலைமையின் கீழ் அதிமுக புத்தெழுச்சி பெற வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Members must vote and elect a single leader: AIADMK working under dual leadership has many disadvantages: Anwar Raja
× RELATED ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பு...