மாநிலங்களவை தேர்தலில் வெற்றி 3 திமுக எம்பிக்கள் பதவியேற்பு: வெங்கய்யா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

சென்னை: திமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 3 எம்பிக்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அதிமுகவை சேர்ந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதையடுத்து அவர்கள் தங்கள் மாநிலங்களவை எம்பி பதவிகளை ராஜினாமா செய்தனர். அந்த பதவிக்கான தேர்தலை அக்டோபர் 4ம் தேதி நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், முகமது அப்துல்லா ஆகிய 3 பேரும் திமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியிட்டனர். இவர்களுக்கு எதிராக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் மாநிலங்களவை எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் என  தமிழக சட்டப் பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசன் கடந்த செப்டம்பர் 29ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்துக்கு முன்பாக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுகவின் 3 மாநிலங்களவை உறுப்பினர்களும் பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியின் போது, திமுக எம்பிக்கள் 3 பேரும், தமிழில் பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: