ஏலச்சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி தம்பதி பிடிபட்டனர்

சென்னை: சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பிரியதர்ஷன் (31) என்பவர், கடந்த அக்டோபர் மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், ‘நான் சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ண செட்டி தெருவில் கிராபிக்ஸ் சென்டர் நடத்தி வருகிறேன். கடந்த 2017ம் ஆண்டு சிந்தாதிரிப்பேட்டை பழைய பங்களா தெருவை சேர்ந்த திவ்யா மற்றும் அவரது கணவர் செந்தில் ஆகியோர் பழக்கமாகினர். இவர்கள் மாத ஏல சீட்டு, தீபாவளி பண்டு மற்றும் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாக கூறினர். தங்களிடம் ஏலச்சீட்டு கட்டினால் சீட்டு முடிந்த உடன் பணத்தை ஒரே தவணையில் கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறினர். அதை நம்பி 37 லட்சத்து 34 ஆயிரத்து 295 ரூபாய் கொடுத்தேன். ஆனால் அவர்கள் ஏலச்சீட்டு முடிந்தவுடன் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டால் ரவுடியை வைத்து கொலை செய்து, கூவம் ஆற்றில் வீசிவிடுவதாக மிரட்டுகின்றனர். என்னை போல் பலரிடம் மொத்தம் ரூ.70 லட்சம் வரை பெற்று மோசடி செய்துள்ளனர். எனவே இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தரவேண்டும்,’ என்று கூறியிருந்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஏலச்சீட்டு நடத்தி திவ்யா அவரது கணவர் செந்தில் பலரிடம் மோசடி செய்தது தெரியவந்தது. மேலும், பணத்திற்கு பதில் அவர்கள் கொடுத்த வங்கி காசோலையும் பணம் இல்லாமல் திரும்ப வந்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து தம்பதிகள் மீது ஐபிசி 420, 406, 506(2) உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

Related Stories: