×

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாண் சட்டம் வாபஸ் மசோதா நிறைவேறியது: விவாதம் நடத்த அனுமதிக்காததால் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா இரு அவைகளிலும் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டது. எந்த விவாதமும் நடத்தாமல் மசோதா நிறைவேற்றப்பட்டதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்ததால் வேறு வழியில்லாததாலும், விரைவில் உபி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதாலும், வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே தாக்கல் செய்யப்படும் என ஒன்றிய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. மக்களவை காலையில் கூடியதும், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவது குறித்து விவாதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி கோஷமிட்டனர். இதன் காரணமாக கேள்வி நேரம் நடத்தப்படாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது. பிற்பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியதும், வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா 2021-ஐ ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். மசோதா மீது விவாதம் நடத்த வேண்டுமென மக்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தினார். இதை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்க மறுத்தார்.

இதனால், எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இந்த அமளிக்கு இடையே, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. 12.06 மணிக்கு தாக்கல் செய்யப்பட்ட மசோதா எந்த விவாதமும் இன்றி 12.10க்கு நிறைவேற்றப்பட்டது. பின்னர், தொடர்ந்து அமளி காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு மாநிலங்களவையில் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மசோதாவை தாக்கல் செய்தார். மசோதா தொடர்பாக பேச மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜூனா கார்கேக்கு வெறும் 2 நிமிட நேரத்தை ஒதுக்கினார் அவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ்.

அப்போது பேசிய மல்லிகார்ஜூனா கார்கே, ‘‘விரைவில் நடக்க உள்ள 5 மாநில தேர்தலில் தோல்வியை தவிர்ப்பதற்காகத்தான் ஒன்றிய அரசு இந்த மசோதாவை கொண்டு வந்தள்ளது. வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதை வரவேற்கிறோம். அதே சமயம், விவசாயிகளின் பிற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். போராட்டத்தில் பலியான 700 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றார். அதற்குள் 2 நிமிட நேரம் முடிந்து விட்டதாக துணைத் தலைவர் ஹரிவன்ஸ் கூறி, மசோதாவை நிறைவேற்ற அனுமதி தந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ‘‘வேளாண் சட்டத்தில் காங்கிரஸ் இரட்டை வேஷம் போடுகிறது.

பிரதமர் மோடி பெரிய மனதுடன் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இந்த விஷயத்தில் அரசின் நோக்கமும், எதிர்க்கட்சிகள் கோரிக்கையும் ஒரே மாதிரியாக இருப்பதால் விவாதம் தேவையில்லை’’ என்றார். எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளி செய்த நிலையில், இந்த கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் வெறும் பெயருக்கு விவாதத்தை நடத்தி சில நிமிடங்களிலேயே இரு அவையிலும் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இது ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, முறைப்படி 3 சட்டங்களும் ரத்து செய்து அரசிதழ் வெளியிடப்படும். இதற்கிடையில், அவையின் மையப்பகுதிக்கு வந்து, விதிகளுக்கு முரணாக கடுமையாக நடந்து கொண்டதால், காங்கிரஸ், சிவசேனா, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்பிக்களை கூட்டத் தொடர் முழுவதிலும் இருந்து சஸ்பெண்ட் செய்து அவை துணைத்தலைவர் உத்தரவிட்டார். அதோடு மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

* 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
மாநிலங்களவையின் மையப்பகுதிக்கு வந்து, விதிகளுக்கு முரணாக கடுமையாக நடந்து கொண்டதால், குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் 12 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து அவை துணைத்தலைவர் உத்தரவிட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்பிக்களில் 6 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள், சிவசேனா, திரிணாமுல் காங்கிரசில் இருந்து தலா 2 பேர், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தலா ஒருவர் ஆவர். அவர்கள் விவரம்: சாயா வர்மா (காங்கிரஸ்), பியூலா தேவி நநிதம் (காங்கிரஸ்), ரிபுன் போரா (காங்கிரஸ்), ராஜாமணி படேல் (காங்கிரஸ்), சயீத் நசிர் ஹூசேன் (காங்கிரஸ்), அகிலேஷ் பிரசாத் (காங்கிரஸ்),  பிரியங்கா சதுர்வேதி (சிவசேனா), அனில் தேசாய் (சிவசேனா), டோலா சென் (திரிணாமுல்), சாந்தா ஷேத்ரி (திரிணாமுல்), இளமாறன் கரீம் (மார்க்சிஸ்ட்), பினோய் விஸ்வம் (இந்திய கம்யூனிஸ்ட்).

* விவாதிக்க தயார் பிரதமர் பேட்டி
கூட்டத்திற்கு வந்த பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் அளித்த பேட்டியில், ‘‘இந்த கூட்டத்தொடர் முக்கியமானதாகும். அனைத்து பிரச்னைகள் தொடர்பாகவும் விரிவாக விவாதிக்க தயாராக உள்ளோம். ஆனால் நாடாளுமன்றத்தை அவமரியாதை செய்யாத வகையில் அமைதியான முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டும். எதிர்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க அரசு தயாராக உள்ளது. 150 கோடி டோஸ் தடுப்பூசி என்னும் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறோம். புதிய உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்’’ என்றார். அனைத்து பிரச்னை குறித்தும் விவாதிக்க தயார் என பிரதமர் மோடி கூறிய நிலையில், எந்த விவாதமும் நடத்தப்படாமல் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* விவாதம் நடத்த பாஜவுக்கு பயம்
நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டி அளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி, நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஆனால் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. வேளாண் சட்டத்திற்கு பின்னால் உள்ள சில சக்தியை வெளிக் கொண்டு வர வேண்டுமென்பதற்காகத்தான் நாங்கள் விவாதம் நடத்த விரும்புகிறோம். இந்த விஷயத்தில் விவாதம் நடத்த அரசு பயப்படுகிறது. தனது பணக்கார நண்பர்களுக்காக இந்த சட்டங்களை பிரதமர் மோடி மீண்டும் கொண்டு வருவார் என சந்தேகப்படுகிறேன். இதுதவிர குறைந்தபட்ச ஆதரவு விலை, லக்கிம்பூர் வன்முறை, 700 விவசாயிகள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது போன்ற விவகாரங்கள் குறித்தும் நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம்’’ என்றார்.

* 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை: நாடாளுமன்றத்தில் 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 12 எதிர்க்கட்சி எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இத்தகைய செயல்கள் நாடாளுமன்றத்தின் ஜனநாயக உணர்வை குறைக்கின்றன.  இந்த இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

* சஸ்பெண்ட் நடவடிக்கை எதிர்க்கட்சியினர் கண்டனம்
கூட்டத் தொடரில் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காங்கிரஸ், திமுக, மதிமுக, சிவசேனா உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘எதிர்க்கட்சியை சேர்ந்த 12 எம்பிக்களின் தேவையற்ற மற்றும் ஜனநாயக விரோத சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஒருமித்த கண்டனம் தெரிவிக்கிறோம். அரசின் எதேச்சதிகார முடிவை எதிர்ப்பதற்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சி எம்பிக்கள் நாளை (இன்று) எதிர்கால நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளோம்’’ என கூறப்பட்டுள்ளது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி அளித்த பேட்டியில், ‘‘நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் கூட அவர் தரப்பு கருத்தை முன்வைக்க வாய்ப்பு தரப்படுகிறது. ஆனால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேச்சை கேட்கக் கூட அரசு தயாராக இல்லை. மாநிலங்களவையில் அமளி நடந்த சிசிடிவி காட்சிகளை பாருங்கள். அதில் ஆண் பாதுகாவலர்கள் பெண் எம்பிக்களை எவ்வளவு முரட்டுத்தனமாக துரத்துகிறார்கள் என்பது தெரியும். இது என்ன மாதிரியான பார்லிமென்ட் நடத்தை?’’ என்றார். காங்கிரஸ் எம்.பி சாயா வர்மா, ‘‘சஸ்பெண்ட் நடவடிக்கை நியாயமற்றது, அநியாயம். இந்த அரசு தனது முரட்டுத்தனமான பெரும்பான்மையை தவறாக பயன்படுத்துகிறது’’ என்றார்.

* பிட்காயினுக்கு அங்கீகாரம் அளிக்கும் திட்டம் இல்லை
நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் தனியார் கிரிப்டோ கரன்சிகள் அனைத்தையும் தடை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், மக்களவையில் நேற்று கிரிப்டோ கரன்சி குறித்த கேள்விக்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில், ‘‘பிட்காயினை ஒரு கரன்சியாக அங்கீகரிக்கும் திட்டம் ஏதும் இல்லை. பிட்காயின் குறித்த எந்தவிதமான புள்ளிவிவரத்தையும் அரசு சேகரிக்கவில்லை’’ எனத் தெரிவித்தார்.

Tags : Agriculture bill withdrawn in both houses of parliament: Opposition lashes out at debate
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...