×

கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் நாளை(நவ.30) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை: கனமழை காரணமாக திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை (30-11-2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும், சென்னையில் படிப்படியாக மழை குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலங்களை மூழ்கியபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சென்னையில் பெய்த பெருமழையால் மாநகரம் மீண்டும் வெள்ளத்தில் சிக்கியது. குமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்னும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகக் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மிதமானது முதல் கனமழை நீடித்து வருகிறது. நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலும் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 1ம் தேதி அன்று தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் இருக்கும். 2ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இதனால், குமரி கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும், அதே போன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நாளை ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். வானிலை ஆய்வு மைய கணிப்புப்படி, இது மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நகர்ந்தால் ஆந்திரா, ஒடிசாவை நோக்கி நகரும் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நெருங்க வாய்ப்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு மட்டுமே கனமழை இருக்கும் என்றும், அதன் பின்பு படிப்படியாக குறையும் என்றும் தெரிவித்துள்ளார். சென்னையை பொறுத்தவரை நேற்றிரவு முதல் மழை பெய்வது குறைந்தது. பல பகுதிகளில் மழை ஓய்ந்ததால் மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் டிசம்பர் 1ம் தேதி வரை சென்னையில் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், ஆனால் மோசமான கனமழை முடிந்துவிட்டது என்றும், சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Holidays , Heavy rain
× RELATED பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல்...