×

ஓமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் வராமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமைச் செயலாளர் காணொளிக்காட்சி மூலம் இன்று ஆய்வு

சென்னை: ‘ஓமைக்ரான்’ உருமாறிய கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் வராமல் தடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன், தலைமைச் செயலாளர் காணொளிக்காட்சி மூலம் இன்று (29.11.2021) ஆய்வு நடத்தினார்.

* உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கக்கூடிய கொரோனா நோய் ஏற்படக் காரணமான கொரோனா வைரஸ் தனது மரபணுவில் தொடர்ச்சியாக மாற்றங்களை உருவாக்குவதன் மூலமாக புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸாக தோன்றுகின்றது. இதுவரை ஆல்பா, பீட்டா, டெல்டா போன்ற உருமாற்றங்கள் ஏற்பட்டு தற்போது டெல்டா வகை கொரோனா வைரஸ் பிரதானமான வகையாக திகழ்கிறது.
* 26 நவம்பர் 2021-இல், உலக சுகாதார நிறுவனம், கொரோனா B.1.1.529 உருமாற்றத்தை ‘ஓமைக்ரான்’ வகையாக அறிவித்தது. மேலும் ‘ஓமைக்ரான்’ வகையை கவலைக்குரிய உருமாற்றமாக (Variant of Concern) அறிவித்துள்ளது.
* கொரோனா ‘ஓமைக்ரான்’ உருமாற்றத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி முதன்முதலில் தென்ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. சமீபகாலமாக தென்ஆப்ரிக்காவில் கோவிட் தொற்று அதிவேகமாக பரவுவதற்கு ‘ஓமைக்ரான்’ உருமாற்றமும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.

* போட்ஸ்வானா, பெல்ஜியம், ஹாங்காங், இஸ்ரேல், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ‘ஓமைக்ரான்’ வகை உருமாற்றம் கண்டறியப்பட்டுள்ளது.
* ‘ஓமைக்ரான்’ உருமாற்றத்தால் கொரோனா வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தப்பிக்கக் கூடிய தன்மை அதிகரித்தல், வேகமாக பரவுதல் மற்றும் வேகமாக செல்களுக்குள் ஊடுருவும் தன்மை போன்ற தன்மைகள் கொண்டதாக உள்ளதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

* இத்தகைய உருமாறிய கொரோனா வைரஸ்களை தமிழ்நாட்டில் தீவிரமாக கண்காணிக்க தமிழ்நாடு முதலமைச்சர் பொதுசுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் முழு மரபணு வரிசைப்படுத்துதல் (Whole Genomic Sequencing) கருவி செப்டம்பர் 14-ஆம் தேதி நிறுவப்பட்டு வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் வித்தியாசமான கோவிட் அறிகுறிகள் உள்ளவர்களிடத்தில் மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை சமீபகாலங்களில் பிரதானமாக டெல்டா வகை கொரோனா மட்டுமே தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. 469 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 95% மேல் டெல்டா வகையே கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை ‘ஓமைக்ரான்’ உருமாறிய கொரோனா தமிழ்நாட்டில் கண்டறியப்படவில்லை.

* ‘ஓமைக்ரான்’ வகை கொரோனா, RT-PCR பரிசோதனையில் கண்டறிய இயலும்.
* ‘ஓமைக்ரான்’ வகை கொரோனா வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளிடமிருந்து தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க தேவையான தடுப்புநடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றது.
* சர்வதேச விமான நிலையங்களில், தென்ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகள் (இங்கிலாந்தும் சேர்த்து), போட்ஸ்வானா, ஹாங்காங், சீனா, இஸ்ரேல், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், பிரேசில், பங்களாதேஷ், மொரிசியஸ் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கண்டிப்பாக RT-PCR பரிசோதனை செய்து, நெகட்டிவ் முடிவு வந்தால் மட்டுமே வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். நெகடிவ் முடிவு வந்தவர்கள் 7 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். 7 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருந்த பின்பு, 8-வது நாளில் மறுபடியும் RT-PCR பரிசோதனை செய்து நெகடிவ் முடிவு வந்தபிறகு அவர்கள்அடுத்த 7 நாட்களுக்கு தாமாக உடல்நிலையை கண்காணிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். பயணிகள் எவருக்கேனும் கோவிட் தொற்று கண்டறியப்பட்டால் கோவிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதுடன், மாதிரிகள் முழு மரபணு வரிசைப்படுத்துலுக்கு உட்படுத்தப்பட்டு உருமாற்றம் உள்ளதா என கண்டறியப்படும்.

* மேலும் மேற்கூறிய 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தமிழ்நாட்டிற்கு வந்த 14 நாட்களுக்குள் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையம் (அ) 104 இலவச மருத்துவ உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.

* மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளில் 5 விழுக்காடு RT-PCR பரிசோதனை செய்யப்பட வேண்டும் என அனைத்து சர்வதேச விமானநிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
* இது தொடர்பாக இன்று (29.11.2021) தலைமைச்செயலாளர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக்காட்சி மூலம் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், ‘ஓமைக்ரான்’ உருமாற்றம் தொடர்பான உலக சுகாதார நிறுவனம் (WHO) வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், ‘ஓமைக்ரான்’ உருமாறிய கொரோனா தொற்றின் பாதிப்புகளை தடுக்க “கொரோனா தடுப்பூசி மட்டுமே சிறந்த ஆயுதம்” என்பதால், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பொது மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இரண்டு தவணைகள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

* தமிழ்நாட்டில் ‘ஓமைக்ரான்’ கொரோனா வைரஸ் தொற்று இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், இது வராமலும், பரவாமலும் தடுக்க தமிழ்நாட்டிற்கு வரும் பன்னாட்டு விமானப் பயணிகளை தொடர்ந்து கண்காணித்தும், RT-PCR பரிசோதனை செய்தும், 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவித்தல் மற்றும் சமுதாய தடுப்பூசி நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற தொடர் தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் அன்றாடம் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

* இந்த ஆய்வுக் கூட்டத்தில் காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சிவ்தாஸ் மீனா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநராட்சி காவல்துறை ஆணையர் சங்கர்ஜிவால், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர்/சிறப்பு பணி அலுவலர் டாக்டர் ப.செந்தில்குமார், பொதுத்துறை செயலாளர் டி.ஜெகந்நாதன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜாக்கப், , பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர்.டி.எஸ்.செல்வ விநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Secretary ,Tamil Nadu , omicron
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...