நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேரை சஸ்பெண்ட் செய்தது ஜனநாயக விரோத செயல்!: எதிர்க்கட்சிகள் கூட்டாக கண்டனம்..!!

டெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேரை சஸ்பெண்ட் செய்தது ஜனநாயக விரோத செயல். இடைநீக்கம் தொடர்பான மாநிலங்களவை விதிகளுக்கு முரணாக 12 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். குளிர்கால கூட்ட தொடர் முழுமைக்கும் 12 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளது முறையல்ல. முந்தைய கூட்டத்தொடரில் நடந்த நிகழ்வுக்காக தற்போதைய கூட்ட தொடரில் தீர்மானம் கொண்டு வருவது துரதிஷ்டவசமானது. மாநிலங்களவையில் அரசு கொண்டு வந்த தீர்மானம் அவை அலுவல் விதிகளுக்கு விரோதமானது.

மாநிலங்களவை எதிர்கட்சி குழு தலைவர்கள் நாளை கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இளமாறன் கரீம், சிவசேனா கட்சியை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டோலாசென், சந்தா சேத்ரி (திரிணாமுல்), ரிபுன் போரா ( காங்கிரஸ்) நாசர் ஹுசைன் ( காங்கிரஸ்) உள்ளிட்ட 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் செய்தார்கள்.

இதனால் கூச்சம் குழப்பம் ஏற்பட்டது. நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் நடத்த முடியாமல் போய்விட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஒன்றிய அரசு இந்த எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்தது. இன்றைய தினம் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் நாளான இன்று இரு அவைகளிலும் 3 வேளாண் சட்ட திருத்தங்களை திரும்ப பெறுவது தொடர்பான மசோதாக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பிற்பகல் மாநிலங்களை கூடியதுமே எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பை மாநிலங்களவை துணை தலைவர் தெரிவித்தார். இது எதிர்கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories: