பீகாரில் மதுவிலக்கு அமலில் இருந்தும் கஞ்சா புகைப்பதை நிதிஷ் குமார் விடவில்லை!: லாலு கட்சி எம்எல்ஏ பகீர் குற்றச்சாட்டு

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கஞ்சா புகைக்கும் பழக்கத்தை ஏன் இன்னும் விடவில்லை? என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ கேள்வி எழுப்பி உள்ளார். பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் அமலில் இருப்பதால், மாநிலத்தின் வருவாய் வெகுவாக பாதித்துள்ளதாக ஆளும் பாஜக எம்எல்ஏ, எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இருந்தும் முதல்வர் நிதிஷ்குமார், மதுவிலக்கு சட்டத்தை அனைவரும் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார். மேலும், இதனை வெற்றிகரமாக அமல்படுத்த உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று மக்களிடம் நிதிஷ் குமார் பிரசாரம் செய்து வருகிறார்.

இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் (லாலு பிரசாத் யாதவ்) கட்சியின் பாரியார்பூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜ்வன்ஷி மஹ்தோ கூறுகையில், ‘மாநிலத்தில் மது, கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு தடை உள்ளது. ஆனால், முதல்வர் நிதிஷ்குமார் கஞ்சா புகைக்கிறார். அவர் மட்டும் கஞ்சா புகைக்கும் போதை பழக்கத்தில் இருந்து விடுபடவில்லை? பீகாரில் மதுவிலக்கு சட்டம் இருப்பது மக்களுக்கு தெரியும். ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் சட்டவிரோத மதுபான சப்ளை தாராளமாக கிடைக்கிறது.

நிதிஷ் குமார் பீகார் மக்களை முட்டாளாக்கி வருகிறார். பீகாரில் மதுபானம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மக்களிடம் ‘மது அருந்தக் கூடாது’ என்று ஏன் உறுதிமொழி ஏற்கச் சொல்கிறார்? காரணம், அவரே அதனை பின்பற்றவில்லை. பீகாரில் உள்ள ஏழைகளை மதுபான மாஃபியாக்கள் சுரண்டி வாழ்கின்றனர். ஏழைகளுக்கு எதிராக மாநில காவல்துறை செயல்பட்டு வருகிறது. அவர்கள் உண்மையான மதுபான மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை’ என்று குற்றம்சாட்டினார்.

Related Stories: