×

இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது

கான்பூர்: இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 345 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அறிமுக வீரர் ஷ்ரேயாஸ் 105 ரன், கில் 52, ஜடேஜா 50 ரன்  விளாசினர். கேப்டன் ரகானே 35, புஜாரா 26, அஷ்வின் 38 ரன் எடுத்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் சவுத்தீ 5 விக்கெட் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 296 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. வில் யங் 89, டாம் லாதம் 95, கைல் ஜேமிசன் 23 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.

இந்திய பந்துவீச்சில் அக்சர் படேல் 5, அஷ்வின் 3, உமேஷ், ஜடேஜா தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து, 49 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 14 ரன் எடுத்திருந்தது.  மயாங்க் 4 ரன், புஜாரா 9 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். புஜாரா 22 ரன்னில் வெளியேற, கேப்டன் ரகானே 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அகர்வால் 17 ரன் எடுத்து சவுத்தீ வேகத்தில் லாதம் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ஜடேஜா டக் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, இந்தியா 19.4 ஓவரில் 51 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், ஷ்ரேயாஸ் - அஷ்வின் இணைந்து உறுதியுடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்தது. அஷ்வின் 32 ரன் எடுத்து (62 பந்து, 5 பவுண்டரி) ஜேமிசன் வேகத்தில் கிளீன் போல்டானார். கழுத்தில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக 3ம் நாள் ஆட்டத்தில் பங்கேற்காமல் ஓய்வெடுத்த சாஹா பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, ஷ்ரேயாஸ் அரை சதம் விளாசி அசத்தினார். அறிமுக வீரரான அவர் முதல் இன்னிங்சில் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஷ்ரேயாஸ் - சாஹா ஜோடி 7வது விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்தது. ஷ்ரேயாஸ் 65 ரன் (125 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சவுத்தீ வேகத்தில் விக்கெட் கீப்பர் பிளண்டெல் வசம் பிடிபட்டார். பொறுப்புடன் விளையாடிய சாஹா அரை சதம் அடிக்க, இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. சாஹா 61 ரன் (126 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), அக்சர் படேல் 28 ரன்னுடன் (67 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் சவுத்தீ, ஜேமிசன் தலா 3, அஜாஸ் படேல் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 284 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடர்ந்த நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் டாம் லாதம் 52 ரன்கள், வில் யங் 2, வில்லியம் சோமேர்வில்லே 36, கனே வில்லியம்சன் 24, ரோஸ் டாய்லர் 2, ஹென்றி நிக்கோல்ஸ் 1, டாம் ப்லுண்டெல் 2, கைலே ஜேமிசன் 5, டிம் சௌதீ 4 ரன்கள் எடுத்தனர். ரச்சின் ரவீந்திரா 18, அஜஸ் படேல் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஷ்வின் 3, அக்சர் படேல் 1, உமேஷ் யாதவ் 1, ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட் எடுத்தனர். 1 விக்கெட் எடுத்தால் வெற்றி என்ற சூழல் இருந்த நிலையில், போட்டி டிராவில் முடிந்தது.

அறிமுக வீரராக அபார சாதனை

நியூசிலாந்துக்கு எதிராக நடக்கும் முதல் டெஸ்டில் அறிமுக வீரராக இடம் பிடித்த ஷ்ரேயாஸ் அய்யர், முதல் இன்னிங்சில் சதம் விளாசி அசத்தினார். அறிமுக டெஸ்டில் சதம் அடித்த 16வது இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இந்த நிலையில், 2வது இன்னிங்சில் அவர் அரை சதம் அடித்தார். இதன் மூலமாக, அறிமுக டெஸ்டில் சதம் மற்றும் அரை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை ஷ்ரேயாஸ் வசமாகி உள்ளது.


Tags : India ,New Zealand , INDvsNZ
× RELATED வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நியூசிலாந்து தொடர் வெற்றி