700 விவசாயிகள் உயிரிழப்புக்கு யார் காரணம்?... வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்காதது ஏன்?.. ராகுல் காந்தி கேள்வி

டெல்லி: 700 விவசாயிகள் உயிரிழப்புக்கு யார் காரணம்? என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது கடும் அமளிக்கிடையே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பது. எதிர்க்கட்சிகளின் பலத்த அமளிக்கு இடையே வேளாண் சட்ட ரத்து மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது. வேளாண் சட்ட ரத்து மசோதாவை விவாதிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கையையும் சபாநாயகர் நிராகரித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; வேளாண் சட்டங்களை பற்றி விவாதிக்க வேண்டும் என கோரியிருந்தோம். ஆனால் விவாதிக்கப்பட வேண்டும் என்ற எங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. விவசாயிகள் உயிரிழந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தியிருக்க வேண்டும். விவாதமின்றி சட்டம் திரும்ப பெறப்பட்டிருப்பது அரசின் பலவீனத்தை காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் விவாதங்களை எதிர்கொள்ள பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை. வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி.

விவசாயிகளை அடக்க முடியும் என அரசு நினைத்தது. பெரு முதலாளிகளுக்காகத்தான் பிரதமர் மோடி அரசு செயல்பட்டு  வருகிறது. வேளாண் விலைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பது குறித்து விவாதிக்க வேண்டும். என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; 700 விவசாயிகள் உயிரிழப்புக்கு யார் காரணம்?. வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்காதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories:

More